திருமலை: கரோனா பரவலால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுமார் 2 ஆண்டுகள் வரை பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. தற்போது வழக்கம் போல் நேரடியாக இலவச தரிசன டிக்கெட்டுகளை திருப்பதியிலேயே வழங்குவதால், பழையபடி திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
தினமும் 30 ஆயிரம் தர்ம தரிசன டோக்கன்களும், 20 ஆயிரம் ரூ. 300 ஆன்லைன் டிக்கெட்டுகளும் வழங்கப்படுகிறது. இது தவிர விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகள் என தினமும் 60 ஆயிரத்திற்கும் மேல் பக்தர்கள் சுவாமியை தரிசித்து வருகின்றனர். சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் கூட்டம் மேலும் அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை சுவாமியை 65,192 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இதன் மூலம் ரூ. 4.41 கோடி உண்டியல் காணிக்கை செலுத்தப்பட்டுள்ளது. மேலும், கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் 32,592 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.