உக்ரைன் மீது கடந்த 17 நாட்களாக ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அங்கு பயின்ற இந்திய மாணவர்களை ‘ஆபரேஷன் கங்கா’ திட்டத்தின் மூலம் மத்திய அரசு மீட்டுவருகிறது. இதுவரை 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் உக்ரைனிலிருந்து தாய்நாடு திரும்பியுள்ளனர்.
அந்த வகையில் உக்ரைனில் இருந்து தப்பி அண்டை நாட்டுக்கு வந்து, அங்கிருந்து இந்தியாவுக்கு இந்திய விமானப் படை விமானம் மூலம் நேற்று முன்தினம் ஏராளமான இந்தியர்கள் வந்தடைந்தனர்.
உணவு, குடிநீர் கிடைக்காமல் அவதி
உத்தரபிரதேச மாநிலம் ஹிண்டன் விமானப்படைத் தளத்துக்கு வந்த இந்திய மாணவர் அஸ்வின்சாந்து கூறும்போது, “சுமி பல்கலைக்கழகத்தில் இருந்தபோது உயிருக்கு பயந்து அஞ்சினோம். அங்கிருந்த பதுங்குக் குழியில் இருந்தபோது உணவும், குடிநீரும்கிடைக்காமல் அவதிப்பட்டோம். ஒவ்வொரு விநாடியும் ஏவுகணைகளால் தாக்கப்படுவோம் என்று பயந்து கொண்டே இருந்தோம். ஒவ்வொரு விநாடியும் செத்து செத்து பிழைப்பது போல இருந்தது.
தற்போது இந்திய விமானப்படையின் சி-17 குளோப்மாஸ்டர் விமானம் மூலம் நாடு திரும்பியுள்ளோம். நாங்கள் அனைவரும் உக்ரைனிலிருந்து போலந்து நாட்டு எல்லைக்கு வந்து அங்கிருந்து இந்திய விமானப் படை விமானத்தில் வந்து சேர்ந்தோம்” என்றார்.
தமிழகத்தின் திருச்சியைச் சேர்ந்த மாணவர் கிருஷ்ணானந்த் கூறும்போது, “எங்களை உக்ரைனிலிருந்து வெளியேற்றி தாய்நாட்டுக்கு திரும்பவரச் செய்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கிறேன். டாக்சிகளுக்கு ரூ.1 லட்சம் வரை பணம் செலுத்திய பிறகும், எல்லையில் சிக்கித் தவிக்கும் பிற நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் அங்கு அவதிப்படுகின்றனர். இதில்பலர் எனது நண்பர்கள். அவர்கள்விரைவில் தங்கள் நாடுகளுக்கு திரும்புவார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.