புதுடெல்லி: ரயில்களில் பயணிகளுக்கு உணவு வினியோகிப்பதற்காக ‘ஐஆர்சிடிசி’ என்ற இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் பிரத்யேகமாக துவங்கப்பட்டது. ஆனால், ஐஆர்சிடிசி சார்பில் ரயில்களில் உணவு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், முக்கிய பெரிய ரயில் நிலையங்களில் உணவு வளாகங்கள் அமைப்பதற்காக அதனிடம் ஒப்படைக்கப்பட்ட இடங்கள் பயன்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால், ரயில்வே துறைக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கடும் அதிருப்தி அடைந்துள்ள ரயில்வே நிர்வாகம், ஐஆர்சிடிசி.க்கு நாட்டின் முக்கிய ரயில் நிலையங்களில் ஒதுக்கப்பட்ட இடங்களை கைப்பற்றி, 150 இடங்களில் முதல் கட்டமாக பயணிகளை கவரும் வகையில் பெரிய உணவு வளாகங்கள், துரித உணவகங்களை அமைக்கும்படி அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் கடந்த 8ம் தேதி உத்தரவிட்டுள்ளது. இது குறித்து, மண்டல அதிகாரிகளுக்கு அது அனுப்பியுள்ள கடிதத்தில், ‘ரயில் நிலையங்களில் காலியாக உள்ள ஐஆர்சிடிசி இடங்கள் மற்றும் பயன்படுத்தப்படாமல் உள்ள இடங்களில் உணவு வளாகங்களையும், துரித உணவகங்களையும் அமைக்க வேண்டும். இதன்மூலம் ரயில்வேயின் வருவாயை பெருக்க வேண்டும்,’ என்று கூறப்பட்டுள்ளது.
