ஆனந்த விகடன் யூடியூப் சேனலுக்காக பேச்சாளர், கல்வியாளர், எழுத்தாளர் என பன்முகம் கொண்ட பேராசிரியை, பல்துறை ஆளுமைகளைச் சந்தித்து உரையாடி வருகிறார். ‘கதைப்போமா with பர்வீன் சுல்தானா’ என்ற பெயரிலான அந்த நிகழ்வில் தமிழ் திரையுலகின் முக்கிய நடிகர்களுள் ஒருவரான விஜய் சேதுபதியை சந்தித்து அண்மையில் உரையாடினார்.
நீண்ட அந்த உரையாடலில் இருந்து சில துளிகள்.
“உங்களுடனான கலந்துரையாடல் மிக ஆழமாகவும், தத்துவார்த்த ரீதியாகவும் உள்ளது. இதற்கு பின்னே உள்ள உங்களின் வாசிப்பைப் பற்றிக் கூறுங்கள்?”
“நான் எதுவும் வாசித்ததில்லை. ஒரு விஷயத்தைப் பற்றி நீங்கள் பேசினால் அதனுள் என்னவெல்லாம் இருக்கிறது என்று அதை பற்றி நான் வெகு நேரம் யோசிப்பதுண்டு. நான் மனிதர்களை மலைகள் போல பார்க்கிறேன். இயற்கை படைத்த மலைகளிடம் நீங்கள் பேசும்போது உங்களிடம் அது மீண்டும் எதிரொலிக்கிறது அல்லவா. அதைப்போலத்தான் இரு நபர்கள் பேசிக்கொள்ளும்போது தங்களின் கருத்துக்களை ஒவ்வொருவரும் எதிரொலித்துக் கொள்கிறார்கள்.
ஒரு சிலையை வடித்துவிட்டு அதை நாம் அழகு என்கிறோம். இயற்கையான மலையை உருவமற்றது என்கிறோம். நம்மால் அந்த உருவத்தை வடிக்க இயலுமா? நாம் விவசாயம் செய்வதால் இயற்கையான காடுகளை ஒழுங்கற்றது என்கிறோம். ஆனால் அவை ஒழுங்குடன்தான் இருக்கின்றன. அதை யாரும் கவனிப்பதில்லை. அப்படிச் சொல்வதற்கு நாம் யார். வேற்று மொழியில் பேசுவதைப் புரிந்துகொள்ள முடியாமல் அதை தவறு என்று சொல்வது போன்றது இது.”
“நீங்கள் வாசிப்பது இல்லை என்று சொல்கிறீர்கள். ஆனால் நீங்கள் புரிந்துகொண்டதை நீங்கள் கரடுமுரடாக சொன்னதை சுமார் நூறாண்டுகளுக்கு முன்பு பாரதியார்
“காக்கை குருவி எங்கள் ஜாதி-நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்;
நோக்குந் திசையெலாம் நாமன்றி வேறில்லை;
நோக்க நோக்கக் களியாட்டம்” என்று கூறியுள்ளார்…”
“ரொம்ப அற்புதமாக உள்ளது. ‘நோக்க நோக்கக் களியாட்டம்’ என்ற சொல்வருகிறது அல்லவா. அதை பலநேரம் நம்மால் செய்ய முடிவதில்லை. சும்மா இருந்தால் போர் அடிக்கிறது என்கிறார்கள். ‘ஒரு மரத்தை வெறுமன வேடிக்கை பாருங்களேன்’ அப்படிச் செய்தால் நம்மை வெட்டிப் பயல் என்பார்கள். ஆனால் அது வெட்டி செயல் அல்ல. `கடைசி விவசாயி’ திரைப்படமும் அதைப்போன்ற ஒரு கதையை உடையதுதான். ஒவ்வொன்றையும் பார்க்க பார்க்க அவ்வளவு சந்தோசமாக இருக்கும்.
மலையைப் பார்த்து ‘இது மலை’ என்று மட்டும் போய்விடுகிறார்கள். அதனுடன் பேசுங்கள். மொழியை மனிதன் கண்டுபிடித்ததே மலையின் மூலமாகத்தான் என்று எனக்கு பலமுறை தோணும். என் உணர்வுகளை வெளிப்படுத்த இந்த மொழியே போதவில்லை என்று நான் கூறுவேன்.என் மனைவிடம், என் குழந்தைகளிடம் நான் சொல்லும் ‘ஐ லவ் யூ’ என்ற வாக்கியத்திற்கு பின்னால் ஐம்பது அறுபது பக்க உணர்வுகள் இருக்கின்றன. என் மனைவி என் மீது காட்டும் அன்பிற்கு முன்னால் நான் செய்யும் அனைத்தும் தூசியாகிவிடுகிறது. அதை இந்த மூன்று வார்த்தைகளுக்கு நான் எப்படி அடக்குவேன். இதேபோல தான் ரசிகர்கள் என் மீது செலுத்தும் அன்பும்.”
இதைப் போன்றே விஜய் சேதுபதி மனம் திறந்து பேசிய நிறைய விஷயங்களை கீழுள்ள லிங்கில் காணுங்கள்.