ஒரே நாளில் 500 முதல் 600 ரஷ்ய துருப்புக்கள் சரணடைந்ததாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான படையெடுப்பு 17 நாட்களை கடந்துள்ள நிலையில், விளாடிமிர் புடினின் படைகள் மன உறுதி இழந்துள்ளதாகவே கருதப்படுகிறது, பலர் உணவு மற்றும் எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மட்டுமின்றி, பல குழுக்கள் போரிடாமல், வெறுமனே சுற்றித்திரிவதாகவும், பலருக்கு தாங்கள் அப்பாவி மக்களை கொல்லத்தான் அனுப்பப்பட்டோமா என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, ரஷ்யாவை அவமானப்படுத்தும் வகையில், தங்களிடம் சிக்கியுள்ள உங்கள் மகன்களை அழைத்துச் செல்ல வாருங்கள் என ரஷ்ய தாய்மார்களுக்கு
உக்ரேனிய பாதுகாப்பு அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.
மேலும், ரஷ்ய இராணுவ வாகனங்கள் ஒரு வாரத்திற்கும் மேலாக தலைநகர் கீவ்வுக்கு வெளியே காத்துக்கிடக்கும் நிலையில், பலரால் எதிர்பார்க்கப்பட்ட விரைவான வெற்றியை ரஷ்யா பெறவில்லை என்று மேற்கத்திய தலைவர்கள் கூறுகிறார்கள்.
ஆனால் தற்போது 40 மைல் தொலைவுக்கு காணப்பட்ட ரஷ்ய இராணுவ வாகனங்கள் உக்ரைன் தலைநகரை சுற்றி வளைக்கும் முயற்சியில் சுற்றியுள்ள காடுகளுக்கும் கிராமங்களுக்கும் பரவி மீண்டும் நகர்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், ஒரே நாளில் மட்டும் 500 முதல் 600 ரஷ்ய வீரர்கள் உக்ரைன் இராணுவத்திடம் சரணடைந்துள்ளதாக ஜனாதிபதி ஜெலென்ஸ்கி காணொளி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இதுவரை ஆயிரக்கணக்கான ரஷ்ய துருப்புகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் இந்த இரு தகவல்களையும் சர்வதேச சமூகத்தால் உறுதி செய்யப்படவில்லை என்றே கூறப்படுகிறது.
இருப்பினும் 9,000 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என மேற்கத்திய நாடுகள் தகவல் வெளியிட்டுள்ளது.