2022 மார்ச் 11 – 12 ஆகிய திகதிகளில் நடைபெற்ற கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவில் குறிப்பாக மீனவர்கள் மற்றும் பாதிரியார்கள் உள்ளடங்கலாக கிட்டத்தட்ட 100 இந்திய யாத்திரிகர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இதேவேளை, சமஎண்ணிக்கையிலான இலங்கை யாத்திரிகர்களும் இத்திருவிழாவில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன், யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய கொன்சூல் ஜெனரல் ராகேஷ் நட்ராஜ் மற்றும் கொன்சுலேட் ஜெனரல் காரியாலயத்தின் ஏனைய அதிகாரிகள் விசேட விருந்தினர்களாக இத்திருவிழாவில் கலந்துகொண்டிருந்தனர்.
2. இத்தீவிற்கு வருகை தந்திருந்த யாத்திரிகர்களை மீன்பிடித்துறை அமைச்சர் கௌரவ.டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வரவேற்றிருந்தார். இவ்விழாவை முன்னிட்டு அங்கு வருகைதந்திருந்த யாத்திரிகர்களுக்காக நடைபெற்ற விசேட பிரார்த்தனைகளை அடுத்து அன்றைய நாள் மாலை சிறப்பு திருப்பலி நடைபெற்றிருந்தது. 2022 மார்ச் 12ஆம் திகதி இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த பாதிரியார்களால் மீனவர்களின் இரட்சகரான பதுவா புனித அந்தோனியாருக்காக ஒரு விசேட திருப்பலி அர்ப்பணிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து பாரம்பரிய திருவிழா இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வுகளின் ஓர் அங்கமாக தேவாலயத்தின் கொடியும் ஏற்றப்பட்டிருந்தது.
3. வருடாந்த திருவிழாவில் ஒவ்வொரு வருடமும் பெருமளவான இந்திய யாத்திரிகர்கள் ஆர்வத்துடன் கலந்துகொள்கின்றனர். 2020ஆம் ஆண்டில் 3000க்கும் அதிகமான இந்திய யாத்திரிகர்கள் கலந்து கொண்டிருந்தனர். இந்த யாத்திரிகர்களுக்கான கொன்சூலர் மட்டத்திலான உதவிகளும் ஏனைய ஆதரவுகளும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய கொன்சூல் ஜெனரல் காரியாலயத்தினால் வழங்கப்படுகின்றது. கொவிட் காரணமாக கடந்த வருடம் திருவிழா இடம்பெறாத நிலையில் கடந்த வருடம் யாத்திரிகர்கள் எவரும் கலந்துகொள்ளவில்லை. இம்முறை கொவிட் நெறிமுறைகளுக்கு அமைவாக திருவிழா ஒழுங்கமைக்கப்பட்ட நிலையில் வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையிலான யாத்திரிகர்கள் கலந்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
4. இலங்கை இந்தியா இடையிலான ஆழமான மக்கள் தொடர்புகளையும், நிலையான கலாசார உறவுகளையும் கோடிட்டுக்காட்டுவதாக இந்த திருவிழா அமைகின்றது. அத்துடன் இரு நாடுகளையும் சேர்ந்த மீனவர்கள் இத்திருவிழாவில் கலந்துகொள்வதன் மூலமாக அவர்களிடையிலான நெருக்கமான உறவுகளுக்கு வழிசமைப்பதுடன் ஒவ்வொருவரையும் அறிந்து கொள்வதற்கும் அவர்களின் பிரச்சனைகளை விளங்கிக்கொள்வதற்கும் சந்தர்ப்பம்கிடைக்கின்றது. கடல் மார்க்கமாக மிகவும் நெருக்கமான இந்த அயல்நாடுகளைச்சேர்ந்த மக்கள் இடையிலான நெருக்கமான பிணைப்பு மற்றும் இவ்வாறான தொடர்புகள் நூற்றாண்டுகள் பழமையான இந்த உறவின் கருவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்திய உயர் ஸ்தானிகராலயம்
கொழும்பு
12 மார்ச் 2022