கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கும் உரிமையை பெற்றுத்தர வேண்டும்: பிரதமருக்கு கோரிக்கை| Dinamalar

பிரதமர் மோடி, விரைவில் இலங்கை செல்ல உள்ளார். அங்கு இலங்கை பிரதமர், ஜனாதிபதியை சந்தித்து, பல்வேறு விஷயங்கள் குறித்து பேச இருக்கிறார்.

இந்திய மீனவர்கள் மீதான இலங்கை படையினரின் தாக்குதல், இந்திய — இலங்கை உறவில் பெரும் பின்னடைவை ஏற்படுத்துகிறது.இதற்கு தீர்வு காண, இலங்கை செல்லும் பிரதமர் மோடி, அங்குள்ள பிரதமரிடம் என்ன விஷயங்களை வலியுறுத்த வேண்டும் என்று மீனவர் சங்க பிரதிநிதிகளிடம் கேட்டோம்.

அவர்கள் கூறியதாவது:ஆழ்கடல் மீன்பிடி படகுபி.சேசு ராஜா, ராமநாதபுரம் மாவட்ட விசைப்படகு சங்க தலைவர்: கச்சத்தீவை இலங்கையிடம் ஒப்படைப்பதற்கு முன், 15 நாட்டிக்கல் கடல் எல்லை நம் மீனவர்களுக்கு கூடுதலாக இருந்தது. இதனால், மீன்பிடி பரப்பளவு அதிகமாக இருந்தது.
தற்போது இந்த பரப்பளவு குறைந்து விட்டதால், எல்லை தாண்டும் நிலை ஏற்படுகிறது.கச்சத்தீவு ஒப்பந்தப்படி, கச்சத்தீவு அருகே உள்ள பகுதி வரை மீன் பிடிக்கலாம். கச்சத்தீவில் இருநாட்டு மீனவர்களும் வலைகளை உலர்த்தலாம் என உள்ளது. இந்த உரிமையை நிலைநாட்ட, ஒப்பந்தப்படி கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கும் உரிமையை பிரதமர் மோடி பெற்றுத்தர வேண்டும்.மீனவர்களை கைது செய்வது, படகுகளை பறிமுதல் செய்வது கூடாது. மீனவர்களை கைது செய்யும் நிலையில் உடனடியாக அவர்களை விடுதலை செய்வதோடு, பறிமுதல் செய்யப்படும் படகுகளையும் அவர்களோடு விடுவிக்கவும் பிரதமர் பேச்சில் முடிவு செய்ய வேண்டும்.

மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில், வேறு எந்த நாடுகளிலும் இல்லாத அளவில், படகுகளை இலங்கை அரசு நாட்டுடைமையாக்கி ஏலம் விடுவதை கைவிடச் செய்ய, இலங்கை அரசிடம் நம் பிரதமர் வலியுறுத்த வேண்டும்.அதே நேரம், எல்லை தாண்டும் பிரச்னையில் இலங்கை தமிழ் மீனவர்களும், தமிழக மீனவர்களும் தான் மோதுகின்றனர். இதற்கு காரணம், சிங்கள மீனவர்களுக்கு இலங்கை அரசு வழங்குவது போல அங்குள்ள தமிழ் மீனவர்களுக்கும் ஆழ்கடல் மீன்பிடி படகுகளை வழங்க வேண்டும்.இலங்கை கடற்படையால் 2011ல் ஐந்து தமிழக மீனவர்கள் மீது பொய் வழக்கு போட்டு துாக்கு தண்டனை அளிக்கப்பட்டது. அவர்களை மீட்டு காப்பாற்றிய பிரதமர் மோடியை நன்றியோடு என்றும் நினைத்து பார்ப்போம்.

மறு ஆய்வு

என்.ஜே.போஸ், தமிழ்நாடு மீனவர் சங்க தலைவர், ராமேஸ்வரம்: பிரதமர் இலங்கை செல்லும் போது, கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்து இருநாட்டு மீனவர்களுக்கும் உள்ள மீன்பிடி உரிமையை பெற வேண்டும். அங்கு மீனவர்கள் வலைகளை உலர்த்தவும் வகை செய்ய வேண்டும்.இலங்கை கடற்படையினர் எக்காரணம் கொண்டும் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் மீது கல்வீச்சு, துப்பாக்கி சூடு நடத்துவது, கப்பலால் மோதுவது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாதுஎன்பதை உறுதி செய்ய வேண்டும்.அரசும், மீனவர்களும் மீன்பிடி சட்டத்தை கடைப்பிடிக்க வேண்டும். மீனவர் பிரச்னைகள் குறித்து பிரதமர் பேச வேண்டும். இலங்கையில் அரசுடைமை ஆக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளுக்கு நிவாரணம் வழங்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கும் போது படகுகளை சிறைபிடிப்பது, மீனவர்களை கைது செய்வது 1983 முதல் நடக்கிறது. அப்போதெல்லாம் பிடித்தாலும் படகுகளை உடனடியாக விடுவித்தனர். கடந்த எட்டு ஆண்டுகளாக மட்டும், படகுகளை விடுவிப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.புதிதாக படகுகளை அரசுடைமை ஆக்கும் சட்டத்தை இலங்கை அரசு கொண்டு வந்து, தமிழக மீனவர் படகுகளை ஏலம் விடுகிறது. இதை மாற்ற, பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இரு நாட்டு மீனவர்களும், இரண்டு கடல் பகுதியிலும் மீன்பிடிக்கும் நிலையை பிரதமர் மோடி உறுதி செய்ய வேண்டும்.

பொதுப் பகுதி சர்ச்சில், தெற்காசிய மீனவர் தோழமை: பாக் ஜலசந்தியை தமிழக – இலங்கை மீனவர்கள் பாரம்பரியமாக பயன்படுத்தி வந்தனர். சர்வதேச விதிப்படி ஒரு நாட்டின் கடல் பரப்பு குறைந்தது 56 கடல் மைல் இருக்க வேண்டும். ஆனால், இந்தியா — இலங்கை இடையிலான பாக் ஜலசந்தி என்பது வெறும் 18 கடல் மைல் தொலைவு மட்டுமே உள்ளது.இந்த பகுதியை இலங்கையின் யாழ்ப்பாணம், மன்னார், தமிழகத்தின் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மீனவர்கள் தலைமுறையாக மீன் பிடி தொழிலுக்கு பயன்படுத்தி வந்தனர்.இதில் எந்த பிரச்னையும் இருக்கவில்லை. ஆனால் இலங்கை அரசுக்கும், விடுதலை புலிகளுக்கும் இடையே போர் தொடங்கிய பின் தான், தமிழக மீனவர்களுக்கு பிரச்னை ஏற்பட்டது.கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்ட பின்னரும் அங்கு தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கவும், வலைகள் காய போடவும், அந்தோணியார் திருவிழா நடத்தவும் ஒப்பந்தத்தில் அனுமதி வழங்கப் பட்டிருந்தது.

ஆனால், இங்கு மீன் பிடிக்க சென்றால் இலங்கை கடற்படை கைது செய்து விடுமோ என்று அச்சத்துடன் தமிழக மீனவர்கள் உள்ளனர்.எல்லை தாண்டுவது உலகின் பல நாடுகளிலும் நடக்கிறது. ஆனால், எங்குமே துப்பாக்கி சூடு கிடையாது. இலங்கை கடற்படையினர் இதில் ஈடுபடுகின்றனர். சவுதி போன்ற நாடுகளில் எல்லை தாண்டிய மீனவர்கள் கைது செய்யப்பட்டால், விசாரணைக்கு பின் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

ஆனால், இலங்கையில் மட்டும்தான் மீனவர்களை சுட்டுக் கொல்வதும், உடல் உறுப்புகளை துண்டிப்பதும், விசைப் படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக நடக்கிறது. இது மனித உரிமை மீறலாகும்.இந்திய அரசால், இதுவரை இதை முடிவுக்கு கொண்டுவர முடியவில்லை. உலகின் பல பகுதிகளிலும் கடல் பிரச்னை சுமுகமாக முடிக்கப்பட்டுள்ளது.அதுபோல இந்தியா – இலங்கை நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு இரு நாட்டு மீனவர்களும் பாரம்பரிய முறைப்படி பரஸ்பரம் மீன் பிடிக்க வழிவகை செய்ய வேண்டும். பாக் ஜலசந்தி பகுதியை பொது பகுதியாக அறிவிக்க, இலங்கையை மத்திய அரசு நிர்ப்பந்திக்க வேண்டும்.

– நமது நிருபர் குழு –

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.