புதுடெல்லி:
ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது குறித்து ஆராய்வதற்காக டெல்லியில் இன்று கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது. கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினர்.
கட்சியின் தோல்விக்கான காரணங்கள், எதிர்கால திட்டங்கள், கட்சியில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் மற்றும் உட்கட்சி தேர்தல் தொடர்பாக பேசப்பட்டன. குறிப்பாக சோனியாவால் கட்சியை வழிநடத்த முடியாத நிலையில், ராகுல் காந்தியை கட்சியின் தலைவராக நியமிக்கலாம் என பல்வேறு தலைவர்கள் கூறி உள்ளனர்.
கூட்டத்தில் அனைத்து தலைவர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்த சோனியா காந்தி, கட்சியை வலுப்படுத்த தேவையான மாற்றங்களை செய்ய தயாராக இருப்பதாக கூறி உள்ளார்.
மேலும், தேர்தல் தோல்விக்கு தாங்கள்தான் காரணம் என காரிய கமிட்டி கருதினால் கட்சியின் நலனுக்காக எத்தகைய தியாகத்தையும் செய்யத் தயார் என சோனியா காந்தி தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதேசமயம், சோனியா காந்தி மீது தங்களுக்கு நம்பிக்கை உள்ளதாகவும் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சுமார் 5 மணி நேரம் நடந்த இக்கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தலைமையின் மீது நம்பிக்கை உள்ளது என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. அத்துடன், அமைப்புத் தேர்தல் நடத்தப்படும்வரை காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி தொடர்வார் என்றும், ஏப்ரல் மாதத்தில் சிந்தன் ஷிவிர் எனும் சிந்தனைக் கூட்டம் நடத்தப்படும் என்றும் முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பொதுச்செயலாளர் வேணுகோபால், கட்சித் தலைவர் உடனடியாக சீரமைப்பு மற்றும் அமைப்பை வலுப்படுத்துவதற்கான சரியான நடவடிக்கைகளை எடுப்பார் என தெரிவித்தார். பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த உடன், கட்சியின் சிந்தனை கூட்டம் நடத்தப்படும். அதற்கு முன் காரிய கமிட்டி மீண்டும் கூடும் என்றும் அவர் தெரிவித்தார். சோனியா காந்தியின் தலைமை மீதான நம்பிக்கையை காரிய கமிட்டி கூட்டம் ஒருமனதாக மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது என்றும் வேணுகோபால் தெரிவித்தார்.
காரிய கமிட்டியின் ஒவ்வொரு உறுப்பினரும் அமைப்புத் தேர்தல்கள் நடைபெறும் வரை சோனியா காந்தி கட்சிக்கு வழிகாட்ட வேண்டும் என்று விரும்புவதாக ரன்தீப் சுர்ஜேவாலா குறிப்பிட்டார்.