காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தியே தொடர்வார் என்று அக்கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தராகண்ட், மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அண்மையில் வெளியாகின. இதில் பஞ்சாபை தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெற்றது. அதே சமயத்தில், காங்கிரஸ் எல்லா மாநிலங்களிலும் படுதோல்வியை தழுவியது. இதையடுத்து, காங்கிரஸ் மீது நாடு முழுவதும் கடும் விமர்சனங்கள் எழுந்தன. மேலும், இந்த தோல்விக்கு பொறுப்பேற்று கட்சித் தலைவர் சோனியா காந்தி பதவி விலக வேண்டும் எனவும் கருத்து தெரிவிக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், இந்த ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் குறித்து விவாதிப்பதற்காக காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை மல்லிகார்ஜுன கார்கேவும், தினேஷ் குண்டுராவும் சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:
ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் குறித்தும், எதிர்காலத்தில் காங்கிரஸை வலுப்படுத்துவது தொடர்பாகவும் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தலைமை மீது நாங்கள் அதிக நம்பிக்கையை கொண்டிருக்கிறோம். எனவே, அவரே காங்கிரஸ் தலைவராக தொடர வேண்டும் என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து தலைவர்கள் தங்களின் கருத்துகளை தெரிவித்தனர். அதுதொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது. நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் எந்தெந்த பிரச்சினைகளை எழுப்புவது என்பது குறித்தும் பேசப்பட்டது என அவர்கள் கூறினர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM