புதுடெல்லி: காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் இன்று மாலை 4 மணியளவில் டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கூடியது.
நடந்து முடிந்த 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது. ஏற்கெனவே ஆட்சியில்இருந்த பஞ்சாபிலும் காங்கிரஸ்தனது ஆட்சியைப் பறிகொடுத்துள்ளது.
403 தொகுதிகளை கொண்ட உ.பி.யில் இரண்டு இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. பஞ்சாபில் கடந்த தேர்தலில் 77 இடங்களில் வெற்றி பெற்று இருந்த நிலையில் அது 18 ஆக குறைந்தது. மணிப்பூரில் 28 இடங்களை வைத்திருந்த நிலையில் அங்கு 4 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது.
கோவாவில் 17 இடங்களை கொண்டிருந்த காங்கிரஸுக்கு இந்த தடவை 11 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்துள்ளது. உத்தராகண்ட் மாநிலத்தில் மட்டும் தான் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 11-ல் இருந்து 19-ஆக உயர்ந்து இருக்கிறது.
5 மாநிலங்களிலும் உள்ள 690 எம்.எல்.ஏ. தொகுதிகளில் 54 இடங்கள் மட்டுமே காங்கிரஸுக்கு கிடைத்து இருக்கிறது.
வரும் செப்டம்பர் மாதம் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் தேர்தல் நடக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அடுத்தடுத்து தேர்தல்களை சந்திக்க வேண்டி இருப்பதால் காங்கிரஸில் சோனியா, ராகுலுக்கு எதிரான எதிர்ப்பு குரல் அதிகரித்து உள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் இன்று மாலை 4 மணியளவில் டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கூடியது.
இந்த கூட்டத்தில் 5 மாநில தேர்தல் தோல்வி மற்றும் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
அடுத்து நடைபெற உள்ள குஜராத், அடுத்தாண்டு நடக்க உள்ள கர்நாடகதேர்தலில் அக்கட்சி வெற்றி பெறாவிட்டால், மாநிலங்களவையில் எதிர்க்கட்சி தலைவர் பறி போகும்அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும், செப்டம்பர் மாதம் திட்டமிடப்பட்டுள்ள உட்கட்சி தேர்தலை முன்கூட்டியே நடத்துவது குறித்தும் ஆலோசனை செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே காங்கிரஸ், அதிருப்தி தலைவர்களான கபில் சிபல், ஆனந்த் சர்மா, மனீஷ் திவாரி உள்ளிட்டோர், டெல்லியில் உள்ள மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத்தின் வீட்டில் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினர். அப்போது கட்சிக்கு புதிய தலைவராக முகுல் வாஸ்னிக்கை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இந்த பின்னணியில் காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.