காதல் திருமணம் தான்; மீண்டும் உறுதி செய்த பிரபாஸ்
தென்னிந்திய சினிமா அளவில் அதிக பெண் ரசிகைகளை கொண்டவர் நடிகர் பிரபாஸ்.. ஆனால் 42 வயதான இவர் இன்னும் மோஸ்ட் எலிஜிபில் பேச்சிலர் ஆகவே வலம் வருகிறார். குறிப்பாக பாகுபலி படத்திற்குப் பின் இவரை திருமணம் செய்வதற்காக கிட்டத்தட்ட ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட வரன்கள் இவரைத் தேடி வந்துள்ளன. ஆனால் அதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார் பிரபாஸ். திருமணம் பற்றி மீடியாக்கள் கேட்கும்போதெல்லாம் ஏதாவது நகைச்சுவையாக பதில் சொல்லி நழுவுவதையும் வாடிக்கையாக வைத்துள்ளார்.
அதுமட்டுமல்ல இவருடன் இணைந்து நடித்த நடிகைகளில் இவருக்கு சரியான ஜோடி என ரசிகர்களால் சொல்லப்படுகிற நடிகை அனுஷ்காவுடன் இவருக்கு காதல் என சொல்லப்பட்டு வந்தாலும் அவர்கள் இருவரும் நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்றே கூறி வருகின்றனர். சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய பிரபாஸின் அத்தை கூட அவர்கள் இருவரும் நண்பர்கள்தான். அவர்களுக்குள் காதல் எல்லாம் இல்லை.. பிரபாஸின் திருமணம் நேரம் வரும்போது நடக்கும் என்று கூறியுள்ளார். ஆனால் பிரபாஸ் தனது திருமணம் காதல் திருமணம் தான் என ஏற்கனவே கூறியுள்ளார்.
அதேபோல தற்போது பிரபாஸ் நடித்த ராதேஷ்யாம் பட ரிலீஸை தொடர்ந்து அவர் மீடியாவில் பேசும்போது கூட அவரிடம் திருமணம் குறித்து கேட்கப்பட்டதற்கு, 'என் திருமணம் நிச்சயம் நடக்கும். அது காதல் திருமணமாக தான் இருக்கும். ஆனால் எப்போது என்பது என் கையில் இல்லை” என்று வழக்கம் போல பட்டும் படாமல் பதில் கூறினாலும் காதல் திருமணம்தான் செய்வேன் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார் பிரபாஸ்.