புதுடெல்லி: மருத்துவ படிப்புக்கான முதுகலை நீட் தேர்வில் கட்-ஆப் மதிப்பெண் 15 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. ஒன்றிய சுகாதார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மருத்துவ கவுன்சிலிங் கமிட்டி, தேசிய தேர்வு வாரியத்திற்கு நேற்று பிறப்பித்த உத்தரவில், ‘மருத்துவ படிப்புக்கான முதுகலை நீட் தேர்வில் அனைத்து வகையான பிரிவினருக்கும் கட் ஆப் மதிப்பெண் 15 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது., பொதுப்பிரிவினருக்கு 35 சதவீதமாகவும், பொது மாற்றுத்திறனாளிகளுக்கு 30 சதவீதமாகவும், ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 25 சதவீதமாகவும் கட் ஆப் மதிப்பெண் குறைக்கப்பட்டுள்ளது. குறைக்கப்பட்ட கட் ஆப் அடிப்படையில் தேர்வு முடிவுகளை வெளியிட்டு அதன் பட்டியலை அனுப்பி வைக்க வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது. அகில இந்திய அளவில் இரண்டு சுற்றுகள் கவுன்சிலிங்கிற்குப் பிறகும் சுமார் 8,000 இடங்கள் காலியாக இருப்பதால், தேசிய மருத்துவ ஆணையத்துடன் கலந்தாலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.