கர்நாடக மாநிலத்தில் குற்றம் என தெரிந்தும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய தவறிய காவல் ஆய்வாளர் மீது தக்க நடவடிக்கை எடுக்க அம்மாநில உயர் நீதிமன்ற தார்வாட் கிளையின் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். சம்பந்தப்பட்ட ஆய்வாளரை விசாரிக்கவும், நடவடிக்கை எடுக்கவும் உத்தர கன்னடா மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு நீதிபதிகள் உத்தரவு.
என்ன நடந்தது?
சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் பணிபுரிந்து வரும் காவல் நிலையம் அமைந்துள்ள தாலுகாவில் வசிக்கும் மனுதாரருக்கும், அவரது சகோதரிக்கும் சொத்து விவகாரத்தில் சிக்கல் என தெரிகிறது. சம்பவத்தன்று மனுதாரரின் வீட்டுக்கு அவரது சகோதரி மற்றும் அவரது கணவர் 30 பேர் அடங்கிய கூலிப்படையினருடன் முற்றுகையிட்டுள்ளார். அவர்கள் அங்கிருந்த பாக்கு மரங்களை அகற்றியுள்ளனர். அதோடு அவருக்கு மிரட்டலும் விடுத்துள்ளனர்.
அதையடுத்து மனுதாரர் தனது தாலுகா காவல் நிலைய ஆய்வாளரை தொலைபேசியில் அணுகி நடந்ததை சொல்லியுள்ளார். இருந்தும் ஆய்வாளர் அது தொடர்பாக வழக்கு ஏதும் பதிவு செய்யவில்லை என தெரிகிறது. தொடர்ந்து 112-க்கு போன் செய்து ஆய்வாளர் வழக்கு பதிவு செய்ய மறுப்பதாக சொல்லியுள்ளார். அப்போதும் அவருக்கு உரிய தீர்வு கிடைக்கவில்லை என தெரிகிறது. தொடர்ந்து காவல் கண்காணிப்பாளரை அணுகியுள்ளார். அதன் பின்னர் கண்காணிப்பாளரின் உத்தரவுக்கு ஏற்ப ஆய்வாளர், மனுதாரரை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். மேலும் சம்பந்தப்பட்ட சொத்தின் சொத்து பத்திரம் மற்றும் மனுதாரரின் சகோதரியை அழைத்துக் கொண்டு காவல் நிலையம் வர சொல்லியுள்ளார். விரக்தியடைந்த மனுதாரர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடுத்துள்ளார்.
இதை விசாரித்த நீதிபதி சில புகார்களுக்கு முதற்கட்ட விசாரணை இல்லாமல் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய புகார் பெறுபவருக்கு அனுமதியுண்டு. குடும்ப வன்முறை, மோசடி, ஊழல் மாதிரியான புகர்களுக்கு விசாரணை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளார்.
மேலும் மனுதாரரின் உரிமையை ஆய்வாளர் புறக்கணித்து உள்ளதாகவும் நீதிபதி சொல்லியுள்ளார். அதோடு மனுதாரர் சொல்லியுள்ள புகார் மீது தக்க நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட மாவட்ட தாசில்தாருக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM