திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வனப்பகுதிகள் கோடை வெப்பத்தின் காரணமாக வனத்தில் கடந்த ஒரு வாரமாக காட்டுத்தீ பரவி வருகிறது. கொடைக்கானல் பெருமாள்மலை, மச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டுத்தீ பரவல் அதிகமாக உள்ளது. தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர், தீயணைப்புத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், தொடர்ந்து எரிந்து வரும் காட்டுத்தீயால் தோகைவரை, மச்சூர், பெருமாள்மலை உள்ளிட்ட பகுதிகளும், பழநி அடிவாரப் பகுதியான கலையமுத்தூர், வத்தலக்குண்டு பிரதான மலைச்சாலையும் புகைமண்டலமாக காட்சியளிக்கிறது.
கொடைக்கானல் மலைப்பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்துவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. காட்டுத்தீ காரணமாக வன உயிர்கள் வேறுபகுதிகளுக்கு இடம்பெயரத் தொடங்கியுள்ளன.
இதையறிந்த நடிகர் கார்த்தி, “கொடைக்கானலில் ஏற்பட்ட காட்டுத்தீயால் தாவரங்கள், வன விலங்குகள் உள்ளிட்டவற்றிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அனைவரும் விரும்பும் கொடைக்கானல் மலைப்பகுதியை காட்டுத்தீயில் இருந்து காக்க வேண்டும்” எனக் கூறி வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி உள்ளது.
“கொடைக்கானல் வனப்பகுதியில் கால்நடை மேய்ச்சல், விறகு வெட்டுவோர், கரி எடுப்பது போன்ற காரணங்களுக்காகவும் கோடைக்காலங்களில் மனித தவறால் வனத்தில் தீ பற்றுகிறது. வனத்திலுள்ள மரங்கள் பெரும்பாலும் அழிக்கப்பட்டுவிட்டதால் மழைபொழிவும் குறைந்துவிட்டது. மேலும் வனத்தில் முறையாக ஃபயர் லைன்கள் அமைக்கப்படவில்லை. அனுமதியில்லாத வனப்பகுதிகளில் கூட மனிதர்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது. இதை வனத்துறையினர் கண்காணிப்பது இல்லை. அதேவேளையில் வனத்தில் ஏற்படும் தீயை அணைக்க நவீன கருவிகளும் அவர்களிடம் இல்லை. இதனைக் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டால் மலைகளின் இளவரசி பாதுகாக்கப்படுவாள்” என்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.
இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் திலீப்பிடம் பேசினோம். “கோடை வெயில் காரணமாக வனத்தில் தீ பற்றி எரிகிறதா அல்லது யாரேனும் தீவைத்தார்களா என்பது குறித்து விசாரித்து வருகிறோம். கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. கீழ்மலை பகுதிகளில் வனத்துறையினரும், தீயணைப்புத்துறையினரும் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது வரை மொத்தம் 10 ஏக்கர் பரப்பில் தீ பரவியுள்ளது. இதில் பெரும்பாலும் புற்கள் எரிந்துள்ளன. விரைவில் முழுவதும் காட்டுத்தீ அணைக்கப்படும்.
இருப்பினும் அணைக்கப்பட்ட பகுதிகளில் புகை மூட்டம் இருக்கும். அது தானாகவே சரியாகிவிடும். இந்தக் காட்டுத்தீயினால் வன உயிர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இதேபோல மரங்களும் பெரிய அளவில் அழியவில்லை. பெரும்பாலும் சமதளங்களில் உள்ள புல்வெளிப் பகுதிகள் தீயில் கருகியுள்ளன. வனத்துறையினர் தொடர்ந்து காட்டுத்தீ பரவல் குறித்து கண்காணித்து அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆண்டுதோறும் கோடையின் தொடக்கத்தில் மழை இருக்கும். ஆனால் இந்த ஆண்டு மழையில்லாததால் வனப்பகுதி வறண்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி வனப்பகுதி மற்றும் வருவாய் நிலங்களில் யாரெனும் தீ வைப்பதாக தகவல் கிடைத்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.