Summer drinks in tamil: நீர்ச்சத்து மிகுந்து காணப்படும் காய்கறி வகைகளில் வெள்ளரிக்காய்க்கு தனி இடம் உண்டு. இந்த அற்புத காயில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த காபிக் மற்றும் அஸ்கார்பிக் அமிலம் நிரம்பியுள்ளது. மேலும், உடலை நீரேற்றமாக வைத்திருக்கவும், எண்ணெய் மற்றும் வறண்ட சருமத்தில் இருந்து நிவாரணம் அளிக்கவும் உதவுகிறது.
வெள்ளரியுடன் எலுமிச்சை சேர்த்து ஜூஸ் செய்து பருகி வந்தால் உடலில் இருக்கும் நச்சுக்களை அடித்து விரட்டும். மேலும், பளபளப்பான சருமத்திற்கும், உடல் சூட்டை தணிப்பதற்கு இந்த ஜூஸ் உதவுகிறது.
இப்படியாக பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள இந்த “வெள்ளரி – எலுமிச்சை” ஜூஸை எப்படி தயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.
வெள்ளரி – எலுமிச்சை ஜூஸ் செய்யத் தேவையான பொருட்கள்
வெள்ளரி – 1
எலுமிச்சை பழம் – 2
தண்ணீர் – 4 டம்ளர்
புதினா இலைகள் – 1 கைப்பிடி
வெள்ளரி – எலுமிச்சை ஜூஸ் சிம்பிள் செய்முறை:
முதலில் ஒரு வெள்ளரிக்காய் எடுத்து அதன் தோலை நீக்கி சிறுசிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். இதேபோல் எலுமிச்சையையும் நன்கு கையால் உருட்டி நறுக்கிக் கொள்ளவும்.
பிறகு, ஒரு கண்ணாடி ஜார் அல்லது பாத்திரம் எடுத்து அதில் தண்ணீர் ஊற்றிக்கொள்ளவும். பின்னர் வெள்ளரிக்காய் மற்றும் எலுமிச்சை பழ துண்டுகளை அதில் போட்டுக்கொள்ளவும்.
இவற்றை சிறிது நேரம் தண்ணீரில் ஊறவைத்துவிடவும்.
இப்போது, புதினா இலைகளை அதன் மேல் தூவி, தாயாராக இருக்கும் ஜூஸை பருகி மகிழவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“