ஜனாதிபதியின் சௌபாக்கியா வேலைத்திட்டத்தின் கீழ் சமுர்த்தி திணைக்களத்தினால் பல்வேறு வேலைத்திட்டங்கள் நாடாளவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப்பிரிவில் சமுதாய அடிப்படை அமைப்பு அலுவலகத்திறப்பு, சௌபாக்கியா வீடு கையளிப்பு, வாழ்வாதாரத்தினை மேம்படுத்த உதவிகள், சமுதாய அடிப்படை அமைப்பினருக்கு அலுவலகப்பைகள் வழங்கும் நிகழ்வு என்பன செயலகத்தில் இடம்பெற்றது.
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸ்ஸமில் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன், செயலக உதவிப்பிரதேச செயலாளர் திருமதி எம்.ஏ.சி.றமீசா, மாவட்ட சமுர்த்தி சிரேஸ்ட முகாமையாளர் ஜே.எப்.மனோகிதராஜ், மாவட்ட சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களுக்குப் பொறுப்பான முகாமையாளர் கே.பகீரதன், பிரதேச செயலக சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளரும் தலைமையக முகாமையாளருமான எஸ்.ஏ.எம்.பஸீர், சமுர்த்தி வங்கி முகாமையாளர் எஸ்.ரவிச்சந்திரன், சமுர்த்தி திணைக்கள உத்தியோகத்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது, தியாவட்டவானின் அந்நூர் பிரதேச சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பு அலுவலகம் திறந்து வைக்கப்பட்டதுடன், சௌபாக்கியா விசேட வீடமைப்புத் திட்டத்தின் வாழைச்சேனை 206டீ பிரதேசத்தில் பயனாளி மற்றும் மக்கள் பங்களிப்புடன் ஏழு இலட்சம் ரூபாய் பெறுமதியில் கட்டடப்பட்ட வீடு உரிய பயனாளியிடம் கையளிக்கப்பட்டது.
அத்தோடு, 2021ம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட சமுர்த்தி பயனாளிக்கு பால் கறக்கும் பசுக்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், சமுதாய அடிப்படை அமைப்புகளுக்கான உறுப்பினர்களுக்கான அலுவலக பைகள் வழங்கப்பட்டன.
அத்துடன், சமுர்த்தி பெறும் இரண்டு பயனாளிகள் வாழ்வாதாரம் உயர்வடைந்த நிலையில் சமுர்த்திக் கொடுப்பனவு அட்டையை தாமாக முன்வந்து ஒப்படைத்ததுடன், சமுர்த்தி திணைக்களத்தினால் கௌரவிக்கப்பட்டனர்.
சமுர்த்தி வங்கியின் புதிய மாற்றங்களுக்கமைவாக தற்போதைய காலத்தில் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்கள் பலம் பொருந்திய ஒரு அமைப்பாகச் செயற்படுவதுடன், இந்த சமுதாய அடிப்படை அமைப்புக்கள் ஒரு கிராம சமுர்த்தி வங்கியாகவும் தற்போது செயற்படுகின்றன.
அந்தளவிற்கு இந்த சமுதாய அடிப்படை அமைப்புக்களுக்கு பல அதிகாரங்களை சமுர்த்தி திணைக்களம் வழங்கியுள்ளது.
இதனடிப்படையில், கிராம மக்களின் உடனடித் தேவைகளுக்காக பணத்தினை கிராமத்திலேயே இந்த சமுதாய அடிப்படை அமைப்புக்கள் வழங்குகின்றன.
இது அநியாய வட்டிக்காரர்களுக்கெதிராக கொண்டு வரப்பட்ட ஒரு பாரிய திட்டமாகும். எனவே, இந்த சமுதாய அடிப்படை அமைப்புக்களைப் பலப்படுத்த கிராமங்கள் தோறும் அலுவலகங்கள் திறக்கப்பட்டும், அலுவலக பைகளும் வழங்கப்பட்டு ஊக்குவிக்கப்படுகின்றது.