மகாராஷ்டிராவில் மாநில அமைச்சர் நவாப் மாலிக் மும்பை தொடர் குண்டு வெடிப்பில் தேடப்பட்டு வரும் தாவூத் இப்ராஹிம் சகோதரியுடன் சொத்து பரிவர்த்தனை தொடர்பு வைத்துக்கொண்டதாகக் கூறி அமலாக்கப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சியான பா.ஜ.க, நவாப் மாலிக் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்று கோரி போராட்டம் நடத்தி வருகின்றது. இந்த நிலையில், சரத்பவாருக்கு தாவூத் இப்ராஹிமுடன் தொடர்பு இருப்பதாக தெரிவித்த மத்திய அமைச்சர் நாராயண் ரானே மகன்கள் நிலேஷ், நிதேஷ் ரானே ஆகியோர் மீது மும்பை போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சூரஜ் சவான் கொடுத்த புகாரின் பேரில் மும்பை ஆசாத் மைதான போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நிதேஷ் ரானே இது தொடர்பாக அளித்த பேட்டியில், “என் மீதும் என் சகோதரன் மீதும் மும்பை போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தாவூத் இப்ராஹிம் மீது சரத்பவார் மற்றும் மகாராஷ்டிரா அரசுக்கு அதிக பாசம் இருந்தால், தங்களது அலுவலகத்திலிருக்கும் காந்திஜி படத்தை அகற்றிவிட்டு தாவூத் இப்ராஹிம் படத்தை வைக்கவேண்டும்.
மாநில அரசுக்கு எதிராக ஊழலை அம்பலப்படுத்தியதால் எங்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்” என்று தெரிவித்தார். நிலேஷ் ரானே இது தொடர்பாக அளித்த பேட்டியில், “சரத்பவார்ஜி ஏன் நவாப் மாலிக்கை ராஜினாமா செய்யும் படி கேட்கவில்லை. சரத்பவாருக்கு தாவூத் இப்ராஹிமுடன் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? மகாராஷ்டிராவில் சரத்பவார் தாவூத் இப்ராஹிமின் ஆள் என்று நினைக்கிறேன்” என்று தெரிவித்தார். ஏற்கெனவே நாராயண் ரானே மற்றும் அவர் மகன் நிதேஷ் ரானே ஆகியோர் மீது தற்கொலை செய்து கொண்ட நடிகர் சுஷாந்த் சிங் மேலாளர் குறித்து தெரிவித்த கருத்து தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.