‛சினிமாவில் ஜெயிக்க… மனசாட்சியை கழற்றி வச்சிரணும்': அனுபவங்களை விவரிக்கிறார் இயக்குனர் தசரதன்
அனுபவம்: 1
''அந்தக் காலத்துல நடிகருக்கு ஒரு நாள் சம்பளம் 25 ரூபா தான்! ஆனா, எம்.ஜி.ஆர்., போட்ட 'திருப்பூர் குமரன்' நாடகத்துல குமரனா நடிச்சதால, 50 ரூபா சம்பளம் கிடைக்கும்னு நினைச்சேன். போலீஸ் தடியால அடிக்கிறதுல என் தலையில இருந்து ரத்தம் தெறிக்கிற காட்சியில, முன்னாடி உட்கார்ந்திருந்த முதல்வர் காமராஜர் சட்டையில ரத்தம் தெறிச்சிருச்சு.உடனே, 'அடிச்சிட்டாங்கிறேன். நாடகத்தை நிறுத்துங்கிறேன்'ன்னு, மேடை ஏறிட்டாரு. மேல வந்த பிறகு அது நடிப்பு, ரத்தம் மாதிரி ஒரு திரவம்னு சொன்னதும் என்னைக் கட்டிப் பிடிச்சு வாழ்த்துனாரு. நாடகம் முடிஞ்சு, எம்.ஜி.ஆர்., என் கையைப் பிடிச்சு 'வெரிகுட்… நல்லாப் பண்ணுன தம்பி'ன்னு பாராட்டுனாரு. அவர் குலுக்குன கைக்குள்ள பணம் இருந்துச்சு. எப்பிடியும் 100 ரூபா இருக்கும்னு நினைச்சேன்… ஆனா, அதுல இருந்தது, 5,000 ரூபா!''
அனுபவம்: 2
''நாகேஷ் எனக்கு வாடா போடா நண்பன். திருவிளையாடல் படத்துல தருமியா அவன் நடிக்கிறப்போ, நான் அசிஸ்டன்ட் டைரக்டர். டைரக்டர் ஏ.பி.நாகராஜன், நக்கீரனா நடிச்சாரு. தருமி நாகேஷ், 'கொங்குதேர் வாழ்க்கை' பாட்டைப் பாடுனதும், 'உன் பாட்டில் பிழை இருக்கிறது'ன்னு நக்கீரன் சொல்வாரு. பதிலுக்கு நாகேஷ் டயலாக் பேசுற சீன், பல 'டேக்' எடுத்துச்சு. அப்போ, நாகேஷை கூப்பிட்டு, 'மாப்பிள்ளை! எவ்வளவு பிழை இருக்கிறதோ அவ்வளவுக்கு குறைத்துக் கொள்ளுங்களேன்!'னு சொல்லுடான்னு சொன்னேன். அதைச் சொன்னதும் யூனிட்டே சிரிச்சிருச்சு. பின்னால ஒரு நாள் பாலச்சந்தர் சார்புல நாகேசுக்கு பாராட்டுவிழா நடந்தப்போ, 'ஆயிரம் படம் நான் பண்ணுனாலும் தருமி கேரக்டரே எனக்குப் பிடிச்சது. அதுலயும், 'எவ்வளவு பிழை இருக்கோ அவ்வளவுக்கு குறைத்துக் கொள்ளுங்களேன்'னு சொன்ன டயலாக் எனக்கு அடையாளம் தந்துச்சு. அந்த டயலாக்கை சொல்லிக் கொடுத்தவன் என் நண்பன்… டேய்! தசரதா! எழுந்திரிடா'ன்னு, அந்தக் கூட்டத்துல கடைசியில உட்கார்ந்திருந்த என்னை எந்திரிக்கச் சொல்லி, அங்கீகாரம் கொடுத்தான்… அதை, என்னைக்குமே மறக்கவே முடியாது!'' -இப்படி ஒவ்வொரு அனுபவத்தையும் அவர் சொல்லும்போது, அந்தக் காட்சிகள் மனத்திரையில் விரிந்து நம்மை மெய் சிலிர்க்க வைக்கின்றன.
தசரதனுக்கு இப்போது வயது, 90. தமிழ்த்திரையுலகம், பகுத்தறிவைப் பரப்பிக் கொண்டிருந்த காலத்தில், 'திருவிளையாடல்', 'கந்தன் கருணை', 'சரஸ்வதி சபதம்' 'திருவருட்செல்வர்' என்று ஆன்மிகப் படங்களை எடுத்து, மகத்தான வெற்றி கண்ட அக்கம்மா பேட்டை பரமசிவம் நாகராஜன் என்ற ஏ.பி.நாகராஜனிடம் பல படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றிய பெருமைக்குரியவர். அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., வி.என்.ஜானகி, ஜெயலலிதா, கருணாநிதி என தமிழக முதல்வர்கள் பலருடனும், நாடகத்திலும், சினிமாவிலும் நடித்த, பணியாற்றிய வாழும் கலைஞர் இவராக மட்டுமே இருக்க முடியும். அந்தக் காலத்து சூப்பர் ஸ்டார் டி.ஆர்.மகாலிங்கம் துவங்கி, உலக நாயகன் கமல் வரையிலும் மூன்று தலைமுறையாக சினிமாவில் பணியாற்றியிருக்கிறார்.
கருணாநிதியின் கைவண்ணத்தில் உருவான தென்பாண்டிச்சிங்கம், 'ரோமாபுரிப் பாண்டியன்' என பல்வேறு சீரியல்கள் என சின்னத்திரையிலும் பணியாற்றி, கருணாநிதியின் கைகளில் விருதும் பெற்ற பெருமைக்குரிய கலைஞர் தசரதன். தசரதனுக்கு சொந்த ஊர், மதுரை அருகிலுள்ள சோழவந்தான். சினிமாவுக்குச் சென்னை சென்றவர், அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். ஓய்வு காலத்தில், சென்னை ஆழ்வார்பேட்டையில் வசிக்கும் தசரதன், கோவை பாப்பநாயக்கன்புதுாரில் வாழும் தன் மகளின் வீட்டிற்கு வந்திருந்தபோது அவரைச் சந்தித்தோம்…''ஏ.பி.நாகராஜன் சார்ட்ட நிறைய படங்கள்ல 'ஒர்க்' பண்ணுனேன். தனியாவும் ரெண்டு மூணு படம் டைரக்ட் பண்ணுனேன். 'இதயரோஜா'ன்னு சொந்தமாவும் ஒரு படம் எடுத்தேன். நண்பர்களால் ஏமாற்றப்பட்டு ஒதுங்கிட்டேன்.
படமெடுக்குறது பெருசில்லை. சினிமாவுல ஜெயிக்கத் தெரியணும். அதுக்கு கொஞ்சம் மனசாட்சியைக் கழற்றி வச்சிரணும். எனக்கு அது தெரியலை. ஆனா, இப்பவும் நான் சாப்பிட்டா செரிக்குது; படுத்தா துாங்கிர்றேன்னா அதுக்குக் காரணமும் என் மனசு. சினிமாவுல ஜெயிக்கலைன்னா என்ன… பேரன் பேத்தியோட நான் சந்தோஷமா இருக்கேன்!''ஸ்கிரீன் இல்லாமலே மனசைப் படம் போட்டுக் காட்டுகிறார் தசரதன். இந்த வயதிலும் சினிமா பார்க்கிறார், விமர்சிக்கிறார். சினிமா அவருடைய பேச்சிலும் மூச்சிலும் இரண்டறக் கலந்திருப்பது நன்றாய்த் தெரிகிறது.
'இப்ப வர்ற படங்களைப் பார்த்தா, உங்களுக்கு என்ன தோணுது' என்று கேட்டால், மென்சிரிப்போடு பதில் சொல்கிறார்…''சினிமாங்கிறது கூட்டு முயற்சி. டீம் ஒர்க்தான் ஜெயிக்கும். இப்ப வர்ற டைரக்டர்கள் பல பேரு, பெருசா யோசிக்கிறதில்லையா, அவுங்க அசிஸ்டன்ட்ஸ் நல்ல விஷயங்களைச் சொல்றதில்லையா, இல்லைன்னா அவுங்க கேக்குறதில்லையான்னு தெரியலை. ஆனா, புதிய சிந்தனையைப் பாக்குறதே அபூர்வமா இருக்கு. மஞ்சப்பைன்னு ஒரு படம் பார்த்தேன்;நல்ல முயற்சி. அது மாதிரிப் புதுசா யோசிக்கணும். எனக்குத் தெரிய நல்லதை ரசிக்கிறதுக்கு தமிழக மக்களை விட வேற யாருமில்லீங்க. நம்ம கொடுக்குறதை நல்லதாக் கொடுக்கணும். அதுக்கு நிறைய வாசிக்கணும்; யோசிக்கணும்; சினிமாவை நேசிக்கணும்!''தரமான வார்த்தைகளில் முடித்தார் தசரதன்.