திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே போட்டோ ஸ்டுடியோ உரிமையாளர் கொலை செய்யப்பட்டு, இருசக்கர வாகனத்துடன் எரிக்கப்பட்ட சம்பவத்தில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. தனது 16 வயது மகளின் காதலை அவர் கண்டித்ததற்காக மகளின் காதலன் கூட்டாளியுடன் சேர்ந்து கொலையை அரங்கேற்றியது தெரியவந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தப்பட்டியைச் சேர்ந்த பாலசுப்பிரமணி, வேடசந்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரே ஸ்டூடியோ கடை நடத்தி வந்தார். வெள்ளிக்கிழமை காலை நத்தப்பட்டி தென்னமரத் தோட்டம் பகுதியில் இருசக்கர வாகனத்துடன் எரிந்து கருகிய நிலையில் பாலசுப்பிரமணியனின் சடலம் மீட்கப்பட்டது. விசாரணையில் அதிரவைக்கும் தகவல்கள் வெளியாகின.
பாலசுப்பிரமணியனின் மகள் கரூர் அருகேயுள்ள பள்ளி ஒன்றில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கும் குளிப்பட்டியைச் சேர்ந்த பி.காம். இரண்டாம் ஆண்டு மாணவனான விமல்ராஜ் என்பவனுக்கும் இடையே ஓராண்டாக “பதின் பருவக் காதல்” இருந்துள்ளது. மகளின் காதல் விவகாரம் தெரியவந்த பாலசுப்பிரமணி, கடந்த வாரம் குளிப்பட்டி சென்று இனிமேல் என் மகளை தொல்லை செய்யக் கூடாது என விமல்ராஜை எச்சரித்து விட்டு வந்துள்ளார். அதே கோபத்துடன் வீட்டுக்கு வந்தவர், விமல்ராஜுவுடன் பேசக்கூடாது என்பதற்காக மகள் பயன்படுத்தி வந்த செல்போனையும் பிடுங்கி உடைத்துப் போட்டுள்ளார்.
காதலியைப் பார்க்க முடியாத ஆத்திரத்தை தனது நண்பன் சரவணன் என்பவனுடன் பகிர்ந்துள்ளான் விமல்ராஜ். அந்த சரவணன் தனது நண்பன் அஜித் என்பவனிடம் விஷயத்தைக் கூறியுள்ளான். இதற்கு ஒரே தீர்வு பாலசுப்பிரமணியத்தை கொலை செய்வதுதான் எனக் கூறிய அஜித், சினிமா பாணியில் அதற்குத் திட்டமும் போட்டுக் கொடுத்துள்ளான். கொலை செய்யச் செல்லும்போது செல்போன் பயன்படுத்தக் கூடாது, கொலை செய்து முடித்ததும் கைரேகை தடயங்களை பெட்ரோல் கொண்டு அழித்துவிட வேண்டும் என திட்டத்தை வகுத்துக் கொடுத்துவிட்டு, அஜித் ஒதுங்கிக் கொண்டுள்ளான்.
கடந்த 10ஆம் தேதி அரிமா சங்கக் கூட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் பாலசுப்பிரமணியன் வீடு திரும்பியுள்ளார். அப்போது “சுப்பிரமணியபுரம்” திரைப்பட பாணியில் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட விமல்ராஜுவும் சரவணனும் அவரது முகத்தில் மிளகாய்ப்பொடியைத் தூவி நிலைகுலையச் செய்துள்ளனர்.
கண் எரிச்சல் தாங்காமல் தவித்த பாலசுப்ரமணியனின் பின் தலையில் இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்கியதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். பின்னர் அவரது நெற்றி, முகம், போன்ற பகுதிகளில் கொடூரமாக கம்பியால் குத்தியதில் சம்பவ இடத்திலேயே பாலசுப்பிரமணியன் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து தாங்கள் கொண்டு சென்ற பெட்ரோலையும் பாலசுப்பிரமணியனின் வண்டியிலிருந்த பெட்ரோலையும் திறந்துவிட்டு அவர் உடலை தீ வைத்து எரித்துவிட்டு இருவரும் தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சந்தேகத்தின் பேரில் விமல்ராஜை பிடித்து விசாரித்தனர்.
அவன் கொடுத்த தகவலின் பேரில் சரவணனையும் அஜித்தையும் கைது செய்தனர். 24 மணி நேரத்தில் இந்த கைதுப் படலம் அரங்கேறிய நிலையில், மூவரிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.