திருவொற்றியூர் தேரடி மற்றும் விம்கோ நகர் பணிமனை ஆகிய மெட்ரோ நிலையங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதன் மூலம் சென்னை மாநகரிலுள்ள மெட்ரோ நிலையங்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் தடத்தின் நீட்டிப்புத் திட்டம், வண்ணாரப்பேடை முதல் விம்கோ நகர் வரை 19 கி.மீ பயணிகள் சேவை இயக்கப்பட்டு வருகிறது. சென்னை மெட்ரோ ரயில் வழித்தடம் நீலம் மற்றும் பச்சை வழித்தடம் என இரண்டு வழித்தடங்களில் செயல்பட்டு வருகின்றது. அதில் நீல வழித்தடத்தில் விமான நிலையத்திலிருந்து புதுவண்ணாரப்பேட்டை வரை இயக்கப்படுகிறது. முதல் வழித்தடத்தின் நீட்டிப்பு பணியாக வண்ணாரப்பேட்டையில் இருந்து விம்கோ நகர் வரை மெட்ரோ ரயில் சேவை ஏற்கனவே இயக்கப்பட்டு வந்தது. அந்த வழித்தடத்தில் காலடிப்பேட்டை, திருவெற்றியூர், விம்கோ நகர் போன்ற ரயில் நிலையங்களில் மெட்ரோ ரயில் செயல்பட்டு வந்தது.
திருவொற்றியூர் தேரடி, விம்கோ நகர் பணிமனை உள்ளிட்ட 2 மெட்ரோ நிலையங்களுக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வந்ததால் அந்த ரயில் நிலையங்களில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் 2 மெட்ரோ ரயில் நிலையங்களின் கட்டுமான பணிகளும் முடிவடைந்துள்ளது. அவற்றுக்கு மெட்ரோ ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு மேற்கொண்டு ஒப்புதல் அளித்துள்ளார். அவரின் ஒப்புதலை தொடர்ந்து, இன்று முதல் திருவொற்றியூர் தேரடி மற்றும் விம்கோ நகர் பணிமனை ஆகிய இரண்டு மெட்ரோ ரயில் நிலையங்களும் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதன்மூலம் இதுவரை 39 மெட்ரோ ரயில் நிலையங்கள் செயல்பட்டு வந்த சென்னையில், இன்று முதல் 41 மெட்ரோ நிலையங்கள் செயல்பட தொடங்கியுள்ளது. இன்று காலை முதல் அந்த ரயில் நிலையங்களில் பயணிகள் பயணித்தனர்.
சிறப்பு சலுகையாக விம்கோ நகர் மெட்ரோ நிலையத்தில் ஒரு மாதத்திற்கு வாகன நிறுத்தும் சேவை இலவசமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் சேவையின் முதல் வழித்தடத்தில் நீட்டிப்பு விம்கோ நகர் மெட்ரோ நிலையம் வரை இருந்த நிலையில், தற்போது விம்கோ நகர் பணிமனை ரயில் நிலையம் வடசென்னைக்கு அது மாற்றப்பட்டு உள்ளது. இதன் காரணமாக இதன் அருகில் உள்ள எண்ணூர், மணலி மக்கள் பயன்பெறுவார்கள் என கூறப்படுகிறது. மெட்ரோ ரயில் தடத்தில் 2-வது வழித்தடத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அந்தப் பணிகள் முடியும் போது நகரின் 80 சதவீத வழித்தடம் இணைக்கப்படும் என்றும், நாளுக்கு நாள் சென்னை மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மார்ச் 11 ஆம் தேதி சென்னை மெட்ரோவில் 2 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
– ந.பால வெற்றிவேல்
சமீபத்திய செய்தி: ஆரணி: மாணவர்களுக்கு பாலியல் தொல்லை – விடுதி துணை காப்பாளரின் மோசமான செயல்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM