டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களின் உற்பத்தி, கொள்முதல் விலை விவரங்கள் வெள்ளை அறிக்கையாக வெளியிடப்படுமா? என்ற எதிர்பார்ப்பு டாஸ்மாக் பணியாளர்கள், சமூக ஆர்வலர்களிடையே ஏற்பட் டுள்ளது.
தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. இங்கு விற்பனை செய்யப்படும் மதுபானங்களுக்கான மதுவிலக்கு ஆயத்தீர்வை வரி மற்றும் விற்பனை வரியை அண்மையில் தமிழக அரசு உயர்த்தியது. இதனால், மதுபானங்களின் விலைரூ.10 முதல் ரூ.80 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வால் ஒரு நாளுக்கு ரூ.10.35 கோடியும், ஆண்டுக்கு ரூ.4,396 கோடியும் தமிழக அரசுக்கு கூடுதல் வருவாய் வர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆண்டுதோறும் ரூ.30 ஆயிரம்கோடிக்கு மேல் விற்பனை நடைபெற்று வரும் டாஸ்மாக் நிறுவனத்தில் மதுபான வகைகளின் உற்பத்திவிலை, டாஸ்மாக் நிறுவனம் கொள்முதல் செய்யும் விலை உள்ளிட்ட விவரங்கள் வெளிப்படையாக அறிவிக்கப்படுவதில்லை. இதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர் பாலசுப்பிர மணியன் கூறியதாவது:
ஒரு மதுபான பாட்டிலின் விலையில் 20 சதவீதம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைக்கும், 60 சதவீதம் அரசுக்கு வரியாகவும், 20 சதவீதம் டாஸ்மாக் நிறுவனத்தின் நிர்வாக செலவுக்கு செல்வதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வருகின்றன.
எங்களுடைய சங்கத்தின் மாநில மாநாட்டில் கூட, மதுபானத்தின் உற்பத்தி மதிப்பு, மத்திய, மாநில அரசுகளின் வரி, டாஸ்மாக் நிறுவனம் கொள்முதல் செய்யும் விலை, விற்பனை செய்யும் விலை உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்என்ற கோரிக்கையை வைத்தோம். ஆனால், அரசு தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை. டாஸ்மாக்நிறுவனம் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுவதை உறுதிசெய்ய அனைத்து விவரங்களையும் தமிழக அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். இதுதொடர்பாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விவரங்களை கேட்க முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுதொடர்பாக, அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் கூறியது:
டாஸ்மாக் நிறுவனம் ஆண்டுதோறும் ரூ.30 ஆயிரம் கோடி அளவுக்கு வருமானம் ஈட்டி வருகிறது.இந்நிலையில், கூடுதல் வருமானத்தை ஈட்டும் நோக்கில் தமிழக அரசு வரியை உயர்த்தியுள்ளது. டாஸ்மாக் கடைகளினால் சமூக, பொருளாதார சீரழிவு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, அரசுக்கு ரூ.30 ஆயிரம் கோடி வருவாய் வருவது ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் பொதுமக்களுக்கு உடல்நலன் பாதிப்பு, வேலை இழப்பு போன்ற காரணங்களால் ரூ.70 ஆயிரம் கோடி அளவுக்கு பொருளாதார இழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
ஏழ்மையில் இருக்கும் மக்களிடம் இருந்துதான் பெரும்பாலும் மதுபான வருவாய் வருகிறது. இது ஒரு நல்லாட்சிக்கு சரியானதாக இருக்காது. சரியான பொருளாதார கொள்கையாகவும் இருக்க முடியாது. எனவே, டாஸ்மாக் கடைகளை படிப்படியாகக் குறைக்கவேண்டும். மேலும், மதுபானங்களின் கொள்முதல் விலை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் மக்கள் அறியும் வகையில் அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.