கொச்சி-கேரளாவில், சாலையோரம் டீக்கடை நடத்துபவரின் மகள் மருத்துவக் கல்லுாரியில் சேர பணமின்றி தவித்தார். அவருக்கு ஏராளமானோர் உதவி செய்துள்ளனர்.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.கொச்சியை சேர்ந்த ஜாசன், வேன் டிரைவராக பணியாற்றினார். இவரது முதுகு தண்டுவடம் 2019ல் பாதிக்கப்பட்டது. இதனால் வேன் ஓட்ட முடியவில்லை. குடும்ப வருமானத்திற்காக, இவரது மனைவி பிந்து ஆட்டோ ஓட்டினார்.
ஜாசனின் மூத்த மகன் சாமுவேல் ஹோட்டல் நிர்வாகமும், இளைய மகன் ஒன்பதாம் வகுப்பும் படிக்கின்றனர். மகள் எட்னா, பிளஸ் 2 படித்து வந்தார். மனைவியின் வருமானம் போதாமல், வேனை விற்று சாலையோரம் டீக்கடை துவக்கினார் ஜாசன். வீடு இல்லாததால், குடும்பம் டீக்கடையிலேயே வசிக்கிறது. எட்னா, தந்தைக்கு உதவியாக டீக்கடையில் வேலைகளை பார்த்துக் கொண்டே படித்தார். டாக்டர் கனவு இருந்ததால், ‘நீட்’ தேர்வு எழுதி வெற்றி பெற்றார்.
ஆலப்புழா மருத்துவக் கல்லுாரியில் அவருக்கு இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால், கல்லுாரி மற்றும் விடுதி கட்டணம் செலுத்த பணம் இல்லாமல் தவித்தார். இதையறிந்த அப்பகுதி மக்கள், எட்னாவின் கல்விக் கனவை நிறைவேற்ற, ‘வாட்ஸ் ஆப்’ சமூக வலைதளத்தில் குழு அமைத்தனர். அதில் கிடைத்த தொகையை வைத்து, எட்னா கல்லுாரியில் சேர்ந்துள்ளார்.
Advertisement