தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் எனக் கூறியுள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், உள் மாவட்டங்களில் வழக்கத்தை விட வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என தெரிவித்துள்ளது.
இது குறித்த செய்திக்குறிப்பில், 13,14,15ஆகிய மூன்று நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனக் கூறியுள்ளது. தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பகல்நேர வெப்பநிலை அதிகபட்சமாக இயல்பை விட 2 முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகரித்து காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும், பூமத்திய ரேகை ஒட்டிய இந்திய பெருங்கடல், தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், 16,17ஆகிய தேதிகளில் மட்டும், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் நெல்லை, கன்னியாகுமரியில் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
சென்னையில் இரு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு மழைக்கு வாய்ப்பில்லை எனவும், காலை நேரங்களில் மட்டும் லேசான பனிமூட்டம் நிலவும் எனவும் தெரிவித்துள்ளது.