தமிழகத்தில் 87 சதவீதத்துக்கு மேல்நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளதால், எத்தனை வைரஸ்கள் வந்தாலும் கவலைப்பட தேவையில்லை என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தமிழகத்தில் 24-வது மெகா கரோனா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம்இடங்களில் நேற்று நடைபெற்றது. சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பிரதான சாலையில் உள்ள மீனவர் சமூக நலக்கூடத்தில் நடந்த தடுப்பூசி முகாமை சுகாதாரத் துறைஅமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி துணை மேயர் மு.மகேஷ்குமார், எம்எல்ஏ த.வேலு ஆகியோர் உடன் இருந்தனர்.
அப்போது, செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:
தமிழகத்தில் இதுவரை நடந்த 23 மெகா தடுப்பூசி முகாம்களில் 3கோடியே 79 லட்சத்து 22,980பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. 2-வது தவணை தடுப்பூசிசெலுத்தாதவர்களை இலக்கு வைத்துதான் தடுப்பூசி முகாம் நடந்துவருகிறது. ஆனாலும், பொதுமக்கள் தடுப்பூசி போடுவதில் மிகுந்த மெத்தனம் காட்டுகின்றனர்.
கரோனா பாதிப்பு தொடர்ந்து சரிவு
தமிழகத்தில் இதுவரை மொத்தம் 10 கோடியே 10 லட்சத்து 94,834 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. தொற்றின் எண்ணிக்கை தற்போதுமளமளவென சரிந்து பூஜ்ஜியத்தைநோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. கேரளா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களிலும், சிங்கப்பூர், மலேசியா போன்ற பக்கத்து நாடுகளிலும் கரோனாவின் வேகம் இன்னும் வீரியத்துடன் உள்ளது. அதனால், இன்னும் ஓரிரு மாதங்கள்கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டியது அவசியம்.
கிண்டி பன்னோக்கு மருத்துவமனை
கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் ரூ.250 கோடி செலவில் பன்னோக்கு மருத்துவமனை கட்டுவதற்கான அனைத்து டெண்டர் பணிகளும் முடிவடைந்து விட்டன. பன்னோக்கு மருத்துவமனை கட்டுவதற்கு அடுத்த வாரம் முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார். அங்கு பல்வேறுவிதமான தடுப்பூசிகளை உருவாக்கும் ஆராய்ச்சிக்கான மருத்துவ கட்டமைப்புகள் உருவாக்கப்படும்.
தமிழகத்தில் 87 சதவீதத்துக்கும் மேல் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளது. அதனால் எத்தனை வைரஸ் வந்தாலும், கவலைப்பட தேவையில்லை. தமிழக முதல்வர், அவர் அவராகவே செயல்பட்டுக் கொண்டிருப்பதால்தான் உள்ளாட்சி, நகராட்சி, சட்டப்பேரவைத் தேர்தலில் 90 சதவீதத்துக்கு மேல் வெற்றியை திமுக பெற்றுள்ளது. எனவே, முதல்வர் வேறு யாரைப் போலவும் செயல்பட வேண்டியது இல்லை.
மாணவர்கள் பத்திரமாக மீட்பு
உக்ரைனில் இருந்து 1,921 மாணவர்களில், 1,890 மாணவர்கள் தமிழகத்துக்கு பத்திரமாக மீட்டு வரப்பட்டுள்ளனர். இதில் 1,524 மாணவர்கள் தமிழக அரசின் செலவில் அழைத்துவரப்பட்டுள்ளனர். 366 மாணவர்கள் அவர்களது சொந்த செலவில் தமிழகம் திரும்பி உள்ளனர். 31 மாணவர்கள் உக்ரைனிலும், அக்கம்பக்கத்தில் உள்ள நாடுகளிலும் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவித்துள்ள னர்.
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்தார்.