தலைமை உத்தரவை மதிக்காத நிர்வாகிகள் – 8 பேர் கட்சியிலிருந்து நீக்கம்

சென்னை:
கூட்டணி கட்சிகளுக்கு பதவிகளை விட்டுக்கொடுக்காத திமுக நிர்வாகிகள் 8 பேர் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவை இடம்பிடித்து அமோக வெற்றி பெற்றது. இதில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுக வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள். இந்த விவகாரம் பூதாகரமான நிலையில் முறைகேடான முறையில் கூட்டணி கட்சிகளின் இடத்தை பிடித்து வெற்றி பெற்றவர்கள், உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டார்.

ஆனால் கூட்டணி கட்சிகளுக்கு பதவியை விட்டுக் கொடுக்க மனமில்லாமல் நிர்வாகிகள் சிலர் அடம்பிடித்து வரும் நிலையில் அவர்கள் கட்சியில் இருந்து தற்போது அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டம், சின்னசேலம் பேரூர்க் கழகச்செயலாளர் எஸ்.கே.செந்தில்குமார், தருமபுரி கிழக்கு மாவட்டம் பொ.மல்லாபுரம் பேரூர்க் கழக செயலாளர் உதயகுமார், பேரூராட்சி முன்னாள் தலைவர் புஷ்பராஜ் மற்றும் பொ.மல்லாபுரம் பேரூரைச்சேர்ந்த ஆனந்தன், ரகுமான்ஷான், மோகன்குமார், தஞ்சை வடக்கு மாவட்டம், வேப்பத்தூர் பேரூர்க்கழக துணைச்செயலாளர் ராமச்சந்திரன், ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் இரா.ராஜதுரை ஆகியோர் கழகக்கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.