திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர தெப்பல் உற்சவத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு கோதண்ட ராமர், சீதா மற்றும் லட்சுமணருடன் அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர தெப்பல் உற்சவம் நேற்று தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் பவுர்ணமி அன்று நிறைவு பெறும் விதமாக தெப்பல் உற்சவம் நடத்தப்படுவது வழக்கம். அவ்வாறு இந்த ஆண்டு தெப்பல் உற்சவம் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று சீதா, லட்சுமணர், ஆஞ்சநேயர் சுவாமி கோதண்டராமருடன் மூன்று சுற்றுகள் அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கொரோனாவால் 2 ஆண்டுகளுக்கு பிறகு தெப்பலில் எழுந்தருளி சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தது குறிப்பிடத்தக்கது.2வது நாளான இன்று இரவு ருக்மணி சமேத ஸ்ரீகிருஷ்ணர் சுவாமி மூன்று சுற்றுகள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர். கடைசி 3 நாட்களான 15, 16, 17 ஆகிய மூன்று தினங்கள் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர். 3வது நாள் மூன்று சுற்றுகளும், 4வது நாள் ஐந்து சுற்றும், 5வது நாள் ஏழு சுற்றுக்கள் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். வருடாந்திர தெப்பல் உற்சவத்தையொட்டி நேற்றும், இன்றும் மெய்நிகர் சேவைகளான வசந்த உற்சவம் மற்றும் சகஸ்கர தீப அலங்கார சேவையும் 15, 16, 17 ஆகிய மூன்று தினங்கள் மெய்நிகர் சேவைகளான ஆர்ஜித பிரமோற்சவம், வசந்த உற்சவம், சகஸ்கர தீப அலங்கார சேவை தேவஸ்தானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. வருடாந்திர உற்சவத்தையொட்டி தினந்தோறும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி தாயார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர்.