திருச்சி துறையூரைச் சேர்ந்த 17 வயது மாணவர் அங்கு உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 5-ம் தேதி பள்ளிக்கு சென்ற மாணவர் மாலையில் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததும் பெற்றோர்களிடம் தான் நண்பர்களுடன் விளையாட செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றார். அதன் பின்னர் விளையாட சென்ற மாணவர் திரும்ப வீட்டிற்கு வரவே இல்லை.
விளையாட சென்ற மகன் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் நண்பர்களின் வீடுகளில் மாணவரை தேடிப்பார்த்தனர். ஆனால், மாணவர் எங்கே சென்றார் என்பது குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. மேலும், மாணவரின் நண்பர்களிடம் விசாரிக்கையில் விளையாடவும் வரவில்லை என்பது தெரியவந்தது.
மேலும், மாணவர் காணாமல் போன அதே நேரத்தில், அதே பள்ளியில் வகுப்பு எடுக்கும் 26 வயதுடைய ஆசிரியை மாயமாகி இருப்பது தெரியவந்தது. இது குறித்து மாணவனின் பெற்றோர் துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து மாணவர் படித்த பள்ளியில் போலீசார் விசாரணை செய்த போது அதே நாளில் ஆசிரியையும் மாயமானது தெரியவந்தது.
ஆனால், ஆசிரியை மாயம் தொடர்பாக இதுவரை யாரும் போலீசில் புகார் தெரிவிக்கவில்லை. துறையூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த அந்த ஆசிரியை எம்ஏ., பிஎட்., படித்துவிட்டு கடந்த 6 ஆண்டுகளாக அதே பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். ஒரே நாளில் ஆசிரியையும், மாணவரும் மாயமாகி உள்ளதால் இருவரும் சேர்ந்து சென்றிருக்கலாம் என்று சந்தேகம் கிளம்பியுள்ளது. தற்போது இது குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.