அமிர்தசரஸ்: தேர்தல் கருத்துக் கணிப்புகளை தடை செய்ய வேண்டும் என்று சிரோமணி அகாலிதளம் கட்சித் தலைவர் சுக்பிர் சிங் பாதல் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் சட்டப்பேரவைக்கு சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிதான் ஆட்சியைப் பிடிக்கும் என்று தேர்தலுக்குப் பிந்தைய பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. இந்நிலையில், அமிர்தசரசில் நேற்று பேட்டியளித்த சிரோமணி அகாலிதளம் கட்சியின் தலைவர் சுக்பிர் சிங் பாதல் கூறியதாவது:
பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் சிரோமணி அகாலிதளம் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். மக்களின் பிரதிநிதியாக சிரோமணி அகாலிதளம் கட்சி செயல்படுகிறது. மக்களுக்கு சேவையாற்ற கடவுள் எங்களுக்கு வாய்ப்பளிப்பார் என்று நம்புகிறேன். கருத்துக் கணிப்புகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. கடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 100-க்கும் மேற்பட்ட இடங்களைப் பிடிக்கும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. ஆனால், நடக்கவில்லை. கருத்துக் கணிப்புகள் மக்களை குழப்பும் செயல். தேர்தலுக்கு முந்தைய மற்றும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தடை செய்யப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.