ஐந்து மாநில தேர்தல்களில் படுதோல்வியை சந்தித்துள்ள நிலையில், இன்று மாலை காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டிக் கூட்டம் நடைபெறுகிறது.
நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. தேர்தலில் பெற்ற தோல்விக்கான காரணங்கள், காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டிக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவராக சோனியா காந்தி இருந்து வரும்நிலையில், அவரால் தீவிரமான தேர்தல் பணிகளை செய்ய முடியவில்லை என்பதுதான் எதார்த்தம். இதனால்தான் கேப்டன் இல்லாத கப்பல்போல காங்கிரஸ் கட்சி தடுமாறும் நிலை உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
உத்தராகண்ட் மாநிலத்தில், தேர்தலுக்கு முன்பாக மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவருக்கும், முன்னாள் முதல்வர் ஹரீஷ் ராவத்துக்கும் இடையே முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் நிலவிய சிக்கல் தொடங்கி, இருதரப்பும் பரஸ்பரம் குற்றம்சாட்டும்வரை கட்சித்தலைமை தலையிடவில்லை. கட்சி தன்னை கைவிட்டுவிட்டதாக ராவத் வருத்தப்பட்ட பின்னரே ராகுல்காந்தி தலையிட்டு பிரச்னையை தீர்த்துவைத்தார்.
பஞ்சாபில் ஆறு மாதத்திற்கு முன்பு வரை, காங்கிரஸ்தான் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என்ற நிலை இருந்தது. நவ்ஜோத் சிங் சித்து முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டு, கட்சித்தலைமைக்கு எதிராகவே சர்ச்சை கருத்துகளை வெளியிட்டுவந்தது கட்சியினர் மத்தியிலும், மக்கள் மத்தியிலும், காங்கிரஸ் மீதான கசப்புணர்வை உருவாக்கியநிலையில், கட்சித்தலைமை மவுனம் காத்ததன் விளைவை தற்போது அறுவடை செய்து கொண்டிருக்கிறது.
கோவா மணிப்பூர் மாநிலங்களிலும் இதே நிலைமைதான். உத்தரப் பிரதேசத்தை பொறுத்தவரை வேட்பாளர்களை அறிவிப்பதில் இருந்து கூட்டங்களை நடத்துவது வரை அத்தனையிலும் குளறுபடிகள் நடந்தன. பெண்களை மையப்படுத்தி காங்கிரஸ் கட்சி செய்த விளம்பரங்களில் இடம்பெற்ற பெண், கடைசி நேரத்தில் பாஜகவில் இணைந்தது, நட்சத்திரப் பேச்சாளர்களாக அறிவிக்கப்பட்ட பெரும்பாலான தலைவர்கள் பரப்புரைக்கே செல்லாதது என உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி தேர்தலை சந்தித்தது.
இந்தநிலையில்தான் இன்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் கூடுகிறது. இதில், 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கான காரணம் மற்றும் நடப்பு அரசியல் சூழல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்படும் எனத் தெரிகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM