இதய நோயால் பாதிக்கப்பட்ட நாய்க்கு ‘பேஸ்மேக்கர்’ கருவி பொருத்தி, மும்பையை சேர்ந்த கால்நடை மருத்துவர்கள் குழு சாதனை படைத்துள்ளது.
மும்பையை சேர்ந்த திவாரி என்பவரது ரோனி என்ற நாய்க்கு கடந்த வாரம் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதன் இதயத்துடிப்பு நிமிடத்துக்கு 30 என்ற அளவில் இருந்துள்ளது. சராசரி அளவு 120 முதல் 150 ஆகும்.
ஜெர்மனியை பூர்வீகமாகக் கொண்ட மினியேச்சர் பின்சர் வகையை சேர்ந்த அந்த நாயை மும்பையில் உள்ள பிரபல கால்நடை மருத்துவர் சங்கீதா வெங்சர்க்கார் ஷாவிடம் எடுத்துச் சென்றனர். அவரது தலைமையிலான மருத்துவர்கள் குழு, ரோனி நாய்க்கு இதயத்துடிப்பை சரிசெய்ய உதவும் ‘பேஸ்மேக்கர்’ கருவியை அறுவை சிகிச்சை மூலம் பொருத்தியுள்ளனர்.
இப்போது நாய் நல்ல நிலையில் குணமடைந்து வருகிறது. இந்தியாவில் நாய்க்கு அரிதாக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த அறுவை சிகிச்சை கால்நடை மருத்துவ வரலாற்றில் ஒருமைல்கல் என்று மும்பை கால்நடை மருத்துவர்கள் சங்க கவுரவ செயலர் மேக்ரன்ட் சவான் பாராட்டியுள்ளார்.
இந்த சாதனையை புரிந்துள்ள சங்கீதா வெங்சர்க்கார் ஷாவை ‘இந்து தமிழ் திசை’ சார்பில் தொடர்புகொண்டு கேட்டபோது, அவர் கூறியதாவது:
இதய அடைப்பு
மனிதர்களுக்கு ‘பேஸ்மேக்கர்’ அறுவை சிகிச்சை அதிக அளவில் செய்யப்படுகிறது. ஆனால், அதிகசெலவு காரணமாகவும், உரிய மருத்துவ உபகரணங்கள் இல்லாததாலும் நாய்களுக்கு ‘பேஸ்மேக்கர்’ பொருத்துவது அபூர்வம். இந்தியாவில் இது 4-வது ‘பேஸ்மேக்கர்’ அறுவை சிகிச்சை.
ரோனிக்கு ‘ஹைகிரேடு மொபிட்ஸ் டைப் 2 ஹார்ட் பிளாக்’ என்ற பாதிப்பு இருந்தது. நாங்கள் இந்த அறுவை சிகிச்சை செய்ய முயன்றபோது நாய் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. அதன் இதயத்தில் அடைப்பு இருந்ததால் உடனே அறுவை சிகிச்சை செய்யவேண்டிய கட்டாயத்தில் இருந்தோம். செல்லப் பிராணிகளுக்கென்று ‘கார்டியாக் கதீடரைசேஷன்லேப்’ வசதி இந்தியாவில் இல்லாததால் நாங்கள் சமாளித்து அறுவைசிகிச்சை செய்ய வேண்டியதாயிற்று. மனிதர்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவரை உடன் வைத்துக் கொண்டோம். அதிர்ஷ்டவசமாக மருத்துவர் ஆசிஷ் நபார் உதவ முன்வந்தார். அவரது உதவியுடன் மருத்துவர் நூபுர் தேசாய் ‘பேஸ்மேக்கர்’ கருவியை பொருத்த, சஞ்சனா கார்வே மயக்க மருந்து செலுத்த, ராதிகா சர்க்கார் சலீல் குடால்கர், ஷ்ராவனி பிஷ்னாய், ஷ்ரேயா பாண்டே அடங்கிய எனது குழுவினர் அறுவை சிகிச்சையை செய்து முடித்தோம். அறுவை சிகிச்சை நடந்த அன்று 3 முறை அந்த நாய் அபாயகட்டத்துக்கு சென்றுவிட்டது. கடுமையாக முயற்சி செய்து இரவு பகலாக கண் விழித்து ‘பேஸ்மேக்கர்’ பொருத்தி நாயை காப்பாற்றினோம். இந்த அறுவை சிகிச்சை எங்களுக்கு உணர்ச்சிபூர்வமாக இருந்தது.
செல்லப் பிராணிகளுக்கு வலி வந்தால் சொல்லத் தெரியாது. ஆனால், அதன் உணர்வுகளை மருத்துவரால் அனுபவத்தின் மூலம்உணர முடியும். வளர்ப்பவர்களும் பிராணிகளின் அறிகுறிகளை உன்னிப்பாக கண்காணிக்க வேண் டும்.
செல்லப் பிராணிகள் தற்போது குடும்ப உறுப்பினர்களாக மாறிவிட்டன. அவற்றின் மருத்துவ சிகிச்சைக்கு செலவழிக்க பிராணிவளர்ப்போர் தயாராகஉள்ளனர். ரத்தப் பரிசோதனை,எக்ஸ்ரே, ஈசிஜி, அல்ட்ராசோனாகிராபி, எக்கோ கார்டியோகிராபி, அறுவை சிகிச்சை ஆகியவை செல்லப் பிராணிகளுக்கு தற்போதுசர்வசாதாரணமாக மேற்கொள்ளப்படுகிறது.
இதய மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே தற்போது செல்லப் பிராணிகளுக்கு எட்டா நிலையில் உள்ளது.இணைய தகவல்கள் மூலம்பிராணி வளர்ப்போர் விழிப்புணர்வுடன் உள்ளனர். செல்லப் பிராணிகளுக்கும் அவ்வப்போது மருத்துவ பரிசோதனை செய்து நோய்களுக்கு சிகிச்சை அளிக்கவேண்டியது பிராணி வளர்ப்போர்கடமை. செல்லப் பிராணிகள் இருமினாலோ, மூச்சு வாங்கினாலோ, அவை இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளன என்று அறிந்து கொள்ளலாம். நம் வீட்டில் உள்ளவர்களை எப்படி கவனிக்கிறோமோ அதேபோல செல்லப் பிராணிகளையும் கவனித்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.