பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார் பகவந்த் மான்: பகத்சிங் பிறந்த கிராமத்தில் 16-ம் தேதி பதவியேற்க திட்டம்

பஞ்சாப் பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்ற ஆம் ஆத்மி கட்சியின் சட்டப்பேரவைக் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள பகவந்த் மான் நேற்று மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து, பஞ்சாபில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதனிடையே பஞ்சாபில் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் மற்றும் மிக முக்கியப் பிரமுகர்கள் பலருக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை வாபஸ் பெறுமாறு அதிகாரிகளுக்கு பகவந்த் மான் உத்தரவிட்டுள்ளார்.

காங்கிரஸ் ஆட்சி செய்து வந்த பஞ்சாப் மாநிலத்தில் கடந்த பிப்ரவரி 20-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 117 பேரவை தொகுதிகளுக்கு ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ், சிரோமணி அகாலி தளம், ஆம் ஆத்மி கட்சி, பாஜக என பலமுனைப் போட்டி நிலவியது.

தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த வியாழக்கிழமை எண்ணப்பட்டன. இதில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது.

காங்கிரஸ் கட்சி 18 இடங்களில் மட்டுமே வென்று, மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்தது. சிரோமணி அகாலி தளம் 3 இடங்களிலும் அதன் கூட்டணிக் கட்சியான பகுஜன் சமாஜ் ஓரிடத்திலும் வென்றன. பாஜக 2 இடங்களிலும் வென்றது. ஓரிடத்தில் சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

பாஜக கூட்டணியில் இடம் பெற்றிருந்த முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான பஞ்சாப் லோக் காங்கிரஸ், சிரோமணி அகாலிதளம் (சக்யுக்த்) ஆகிய கட்சிகள் ஓரிடத்தில் கூட வெற்றி பெறவில்லை. முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங், அகாலி தளம் தலைவர் பிரகாஷ் சிங் பாதல் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களை ஆம் ஆத்மி வேட்பாளர்கள் தோல்வியுறச் செய்தனர்.

எம்எல்ஏக்கள் கூட்டம்

இந்த அபார வெற்றியை தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் மொகாலியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் முதல்வர் வேட்பாளராக ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட பகவந்த் மான், சட்டப்பேரவைக் குழு தலைவராக தேர்வு செய்யப் பட்டார்.

48 வயதாகும் பகவந்த் மான், துரி தொகுதியில் இருந்து பஞ்சாப் சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்னாள் நகைச்சுவை நடிகரான இவர், பஞ்சாபின் சங்ரூர் தொகுதியில் இருந்து தொடர்ந்து 2-வது முறையாக ஆம் ஆத்மி சார்பில் மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் மாநிலத் தலைவராகவும் பொறுப்பு வகித்து வந்தார்.

இந்நிலையில் பகவந்த் மான் நேற்று சண்டிகரில் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை ஆளுநர் மாளிகையில் சந்தித்தார். அப்போது ஆட்சி அமைக்க உரிமை கோரினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஆளுநரை சந்தித்து, எங்கள் எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதம் கொடுத்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினேன். பதவியேற்பு விழாவை எங்கு நடத்த விரும்புகிறீர்கள் என ஆளுநர் கேட்டார். சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங்கின் கிராமமான காட்கர் கலனில் வரும் 16-ம் தேதி பகல் 12.30 மணிக்கு நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தேன். பஞ்சாப் முழுவதும் உள்ள வீடுகளில் இருந்து மக்கள் விழாவுக்கு வருவார்கள். அவர்களும் பகத்சிங்குக்கு அஞ்சலி செலுத்துவார்கள். பகத்சிங் வகுத்த மக்கள் நலன் மற்றும் மாநிலத்தை முதன்மைப்படுத்தும் கொள்கையின்படி அரசு இயங்கும்.

புதிய அரசு, மாநிலத்தின் வளர்ச்சிக்காக உழைக்கும். சிறந்த அமைச்சரவையை நாங்கள் அமைப்போம். இதுவரை எடுக்கப்படாத வரலாற்றுச் சிறப்புமிகுந்த முடிவுகளை எங்கள் அரசு எடுக்கும். இவ்வாறு கூறினார்.

பதவியேற்பு விழாவுக்கு வருமாறு ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால் மற்றும் மூத்த தலைவர் களுக்கு பகவந்த் மான் அழைப்பு விடுத்துள்ளார்.

பகவந்த் மான் நேற்று தனது சொந்த காரிலேயே ஆளுநர் மாளிகைக்கு வந்தார். என்றாலும் அரசு வாகனங்கள் அவருக்கு பாதுகாப்பு அளித்தன. பகவந்த் மான் உடன் 6 முதல் 7 பேர் வரை மட்டுமே தற்போது அமைச்சர்களாக பதவியேற்பார்கள் என கூறப்படுகிறது.

அதிரடி உத்தரவு

இதனிடையே பஞ்சாபில் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் மற்றும் மிக முக்கியப் பிரமுகர்கள் பலருக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை வாபஸ் பெறுமாறு அதிகாரிகளுக்கு பகவந்த் மான் உத்தரவிட்டுள்ளார். ”மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள பாதல் குடும் பத்தினர் மற்றும் முன்னாள் முதல் வர்கள் அமரீந்தர் சிங், சரண்ஜித் சிங் சன்னி தவிர காங்கிரஸ் மற்றும் அகாலி தளம் தலைவர்கள் அனைவரின் பாதுகாப்பை விலக்கிக் கொள்ள வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.

இதையடுத்து மாநில காவல்துறை பிறப்பித்துள்ள உத்தரவின்படி 13 முன்னாள் அமைச்சர்கள், ஒரு முன்னாள் சபாநாயகர், ஒரு முன்னாள் துணை சபாநாயகர் உட்பட 122 பேரின் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. இவர்களில் 100-க்கும் மேற்பட்டோர் முன்னாள் மற்றும் இந்நாள் எம்எல்ஏக்கள் ஆவர். வெவ்வேறு படைப்பிரிவுகள் மற்றும் கமாண்டோ படையின் 400-க்கும் மேற்பட்ட வீரர்கள் இவர்களுக்கான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இவர்களுக்கான பாதுகாப்பை உடனடியாக வாபஸ் பெறுமாறு மாநில காவல்துறை உத்தர விட்டுள்ளது.

முன்னதாக, மாநில தலைமைச் செயலாளர் அனிருத் திவாரி, டிஜிபி வி.கே.பவ்ரா ஆகியோர் பகவந்த் மானை நேற்று முன்தினம் இரவு சந்தித்தனர். அப்போது, பொதுமக்களுக்கு எந்தவித தொந்தரவும் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் அதேவேளையில் ஊழியர்களிடம் ஒழுக்கத்தை உறுதிப்படுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

நடத்தை விதிகள் விலகின

இதனிடையே பஞ்சாபில் ஜனவரி 8 முதல் அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிகளை தேர்தல் ஆணையம் விலக்கிக் கொண்டது. இதுகுறித்து பஞ்சாப் தலைமைச் செயலாளருக்கு மாநில தலைமை தேர்தல் அதிகாரி எழுதியுள்ள கடிதத்தில், பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டதால், தேர்தல் நடத்தை விதிகளை உடனடியாக விலக்கிக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.