பஞ்சாபில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் ஆம் ஆத்மி 92 இடங்களை கைப்பற்றி அபாரவெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸுக்கு 18, அகாலி தளத்துக்கு 3, பாஜகவுக்கு 2, பகுஜன் சமாஜ், சுயேச்சை தலா ஓரிடத்தில் வெற்றி பெற்றனர்.
புதிய சட்டப்பேரவைக்கு 13பெண் எம்எல்ஏக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஆம் ஆத்மிசார்பில் மொத்தம் 12 பெண்வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டனர். இதில் 11 பேர் எம்எல்ஏக்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள னர். காங்கிரஸ், அகாலி தளத்தைசேர்ந்த தலா ஒரு பெண் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஆம் ஆத்மியை சேர்ந்த நரிந்தர்கவுர், சங்ரூர் தொகுதியில் எம்எல்ஏவாகி உள்ளார்.
அவர் கூறும்போது, “பாஜகவின் அரவிந்த் கன்னா, காங் கிரஸ் அமைச்சர் விஜய் இந்தர்சிங்லாவுக்கு எதிராக போட்டியிட்டேன். இருவருமே கோடீஸ்வரர்கள். என்னிடம் சில ஆயிரங்கள் மட்டுமே இருந்தன. எனினும் மக்களின் ஆதரவால் வெற்றி பெற்றுள்ளேன்” என்று தெரிவித்தார்.
மோகா தொகுதியில் ஆம் ஆத்மியை சேர்ந்த அமன்தீப் கவுர்எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். உக்ரைனில் மருத்துவம் பயின்றுள்ள அவர் காங்கிரஸ் வேட்பாளரும் நடிகர் சோனுசூட்டின் சகோதரியுமான மாளவிகாவை தோற்கடித்துள்ளார்.
அகாலி தளத்தை சேர்ந்த 3 பேர் மட்டுமே சட்டப்பேரவையில் நுழைய உள்ளனர். அவர்களில் பெண் எம்எல்ஏ கானிவ் கவுரும் ஒருவர். ஆம் ஆத்மி வேட்பாளர் சுகிந்தர் ராஜ் சிங்கை சுமார் 26,000 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோற்கடித்துள்ளார்.
3-வது முறையாக…
காங்கிரஸை சேர்ந்த அருணா சவுத்ரி, தினா நகர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். 1,377 வாக்குகள் வித்தியாசத்தில் 3-வது முறையாக அவர் தொகுதியை தக்க வைத்துள்ளார். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அவர் அமைச்சராக பணியாற்றினார்.