நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் (2022-23ஆம் நிதியாண்டு) முதல் கட்டமாக ஜனவரி 31 முதல் பிப்ரவரி 11ஆம் தேதி வரையும், இரண்டாம் கட்டமாக மார்ச் 14 முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரையும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த ஜனவரி மாதம் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு கூடியது.
பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான அன்று இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் காலை 11 மணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அதனைத்தொடர்ந்து, பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, பிப்ரவரி 1ஆம் தேதி மணிக்கு 2022-23ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த ஆண்டும் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கமாக அதிக நேர உரையாற்றும் நிர்மலா சீதாராமன் இந்த முறை 90 நிமிடங்களில் தனது பட்ஜெட் உரையை முடித்துக் கொண்டார். இந்த நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2ஆவது அமர்வு நாளை தொடங்குகிறது. நாளை துவங்கும் இரண்டாவது அமர்வு, ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடக்கிறது. இரண்டாவது அமர்வில், இரு அவைகளும் மொத்தம் 19 நாட்கள் கூட உள்ளன.
முதல் அமர்வில் மாநிலங்களவை காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலும், மக்களவை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் செயல்பட்ட நிலையில்,
கொரோனா
பரவல் குறைந்ததையடுத்து, இரு சபைகளும் வழக்கம் போல் காலை 11 மணிக்கு துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவை ஒரு மணி நேரம், கூடுதலாக மாலை 6 மணி வரை செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.