தமிழக பதிவுத் துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டில் அரசுக்கு ரூ.12,700கோடி நிதி வருவாய் கிடைத்துள்ளது என்று வணிக வரி, பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் மூர்த்தி நேற்று வெளியிட்ட அறிக்கை:
தமிழக பதிவுத் துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்குநடப்பு ஆண்டில் அரசுக்கு ரூ.12,700கோடி நிதி வருவாய் கிடைத்துள்ளது. அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களிலும், அரசுக்கு செலுத்த வேண்டிய பதிவுக் கட்டணம் அனைத்தும் இணையவழி மூலமாக செலுத்தும் நடைமுறை முழுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது.
மேலும், சார் பதிவாளர்கள் அனைவரும் அரசால் நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டி மதிப்பீட்டின்படி பத்திரப் பதிவு மேற்கொள்ளுமாறும், வழிகாட்டி மதிப்பீட்டை குறைத்தோ, அதிகப்படுத்தியோ பத்திரப் பதிவு மேற்கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. அதுபோல பத்திரப் பதிவுமேற்கொள்ளும் பொதுமக்களும் அரசால் நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டி மதிப்பீட்டின்படி பதிவு செய்ய வேண்டும்.
வழிகாட்டி மதிப்பீட்டை குறைத்து பதிவு செய்தது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இழப்பீடு வசூலிக்கப்படும்.
பொதுமக்கள் பத்திரப்பதிவு செய்யும்போது சார் பதிவாளர் அலுவலகத்தில் எந்த அலுவலர்களுக்கோ, இடைத் தரகர்களுக்கோ கையூட்டு கொடுக்க வேண்டாம்.
கையூட்டு கேட்கும் அலுவலர்கள் குறித்து பதிவுத் துறை தலைவர், அரசு செயலர் மற்றும் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.