புதுடெல்லி:
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் 31-ந்தேதி தொடங்கியது. பிப்ரவரி 1-ந்தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
பிப்ரவரி 11-ந்தேதி வரை இந்த கூட்டத்தொடரின் முதல் பகுதி நடைபெற்று முடிந்தது.
பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு பகுதியை மார்ச் 14-ந்தேதி முதல் ஏப்ரல் 8-ந்தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி பாராளுமன்றம் நாளை கூடுகிறது.
5 மாநில தேர்தல் முடிந்துள்ள நிலையில் பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு மத்தியில் நாளைய கூட்டம் தொடங்க உள்ளது. இந்த கூட்டத்தில் பா.ஜனதா உறுப்பினர்கள் உற்சாகத்துடன் கலந்து கொள்ள உள்ளனர்.
ஆனால் எதிர்க்கட்சிகள் பட்ஜெட் கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப முடிவு செய்துள்ளனர். மத்திய அரசு பொதுச் சொத்துகளை விற்பதற்கு முடிவு செய்துள்ளது. இதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து எதிர்ப்பு தெரிவிக்க உள்ளனர்.
மேலும் சில சட்ட முன்வடிவுகளுக்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எனவே பாராளுமன்ற கூட்டத் தொடர் அனல் பறப்பதாக இருக்கும். தினமும் அமளியை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் வியூகம் வகுத்துள்ளனர்.
எதிர்க்கட்சிகளின் திட்டத்தை முறியடித்து பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த பா.ஜனதா தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
இதையும் படியுங்கள்… கேரளாவில் தந்தைக்கு துணையாக டீக்கடையில் வேலைபார்த்த மாணவிக்கு எம்.பி.பி.எஸ்.சில் சேர இடம்