உக்ரைனில் நடந்து வரும் போர் பின்னணியில் நிலவும் உலகளாவிய சூழ்நிலை மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு தயார்நிலை குறித்து விவாதிப்பதற்கான உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையின் மூன்று தலைவர்கள் உட்பட முக்கிய அரசு அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் பங்குபெற்றனர்.
இதில் பேசிய மோடி, “பாதுகாப்புத் துறையில் இந்தியாவைத் தன்னிறைவு பெறச் செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். அது நமது பாதுகாப்பை வலுப்படுத்துவது மட்டுமின்றி, பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும்” என வலியுறுத்தியுள்ளார். மேலும், “கார்கிவ் நகரில் உயிரிழந்த நவீன் சேகரப்பாவின் உடலைக் கொண்டுவர அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்” என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து இந்தக் கூட்டத்தில், உக்ரைனிலிருந்து இந்தியர்களை வெளியேற்றுவதற்கான ஆபரேஷன் கங்காவின் விவரங்கள் உட்பட, உக்ரைனின் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து பிரதமர் மோடிக்கு விளக்கப்பட்டது என மத்திய அரசு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.