இந்தியாவின் பாதுகாப்புத் தயார்நிலை, உக்ரைன் போரால் நிலவும் உலகளாவிய சூழல் ஆகியன குறித்துப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் உயர்நிலை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
உக்ரைனில் ரஷ்ய ராணுவத்தின் தாக்குதல் 18ஆவது நாளாக இன்றும் நீடிக்கிறது. இதனால் அந்நாட்டில் இருந்து இருபது இலட்சத்துக்கு மேற்பட்டோர் வெளியேறி அண்டை நாடுகளில் புகலிடம் தேடியுள்ளனர்.
உக்ரைனில் கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்காகத் தங்கியிருந்த இந்தியர் உள்ளிட்ட வெளிநாட்டவர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். போரின் விளைவாகக் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.
உக்ரைன், ரஷ்யா ஆகிய நாடுகளில் இருந்து உணவு தானியங்களை இறக்குமதி செய்யும் நாடுகளில் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ரஷ்யா மீதும், அதற்குத் துணைபோகும் பெலாரஸ் மீதும் மேலைநாடுகள் பொருளாதாரத் தடை விதித்துள்ளன.
இந்நிலையில் இந்தியாவின் பாதுகாப்புத் தயார்நிலை, உக்ரைன் போரால் நிலவும் உலகளாவிய சூழல் குறித்து டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்நிலை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
உக்ரைன் போரால் உலக அளவில் பாதுகாப்பு, பொருளாதாரம் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்துக் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.