கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தைச் சேர்ந்த கொளஞ்சி – அமுதா தம்பதியின் மகன் நிஷாந்த். இவர் 10-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது தன்னை பெண்ணாக உணர ஆரம்பித்திருக் கிறார். மனதளவில் பெண்ணாக வாழ்ந்த நிஷாந்த் பேச்சு, நடை, உடை, பாவனை என அனைத்திலும் தன்னைப் பெண்ணாக அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பினார். ஆனால், அதற்கு அவரின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்க, மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார் நிஷாந்த். ஒரு கட்டத்தில் தான் பெண் அல்லள், திருநங்கை என்பதை உணர்ந்துகொண்ட அவர், கடலூரில் உள்ள திருநங்கைகளிடம் தஞ்சமடைந்து தனது பெயரை நிஷா என மாற்றிக்கொண்டார்.
இந்நிலையில், தன் மகனுக்கு இயற்கையாக ஏற்பட்ட பாலியல் மாற்றத்தை உணர்ந்துகொண்ட பெற்றோர், மகனின் பிரிவை தாங்கிக்கொள்ள முடியமால் அவரைத் தேடி அலைந்தனர். பின்னர் நிஷா கடலூரில் இருப்பதைத் தெரிந்துகொண்டு, அவரை மனதார ஏற்றுக்கொண்டு வீட்டுக்கு அழைத்து வந்தனர். அத்துடன் அவருக்கு அறுவைசிகிச்சை மூலம் பாலியல் மாற்றத்தையும் செய்தனர்.
சிகிச்சை மூலம் திருநங்கையாக மாறியவருக்கு ஒரு வருடம் கழித்து `வருட பூஜை’ என்ற விழாவை நடத்திப் பெண்ணாக அங்கீகரிப்பது வழக்கம். அதன்படி, நிஷா கடந்த ஆண்டு திருநங்கையாகப் பாலியல் மாற்று அறுவைசிகிச்சை செய்த நாளை மஞ்சள் நீராட்டு விழாவாக நடத்த நிஷாவின் பெற்றோர் முடிவு செய்தனர்.
அதைத்தொடர்ந்து கடந்த மார்ச் 1-ம் தேதி பெண்ணாக மாறிய தங்கள் மகள் நிஷாவுக்கு மஞ்சள் நீராட்டு விழாவை நடத்தினர். அந்த விழாவில் அவரின் குடும்பத்தினர், உறவினர்கள், மட்டுமல்லாமல் ஊர் மக்களும் கலந்துகொண்டு நிஷாவை வாழ்த்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுகுறித்து நிஷாவிடம் பேசினோம். “நான் பத்தாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தபோது என்னைப் பெண்ணாக உணர ஆரம்பித்தேன். உடன் படிக்கும் சக தோழிகளுடன் பேசுவது, அவர்களுடன் மட்டுமே வெளியில் செல்வது என்று இருந்த நான், ஆண்களிடம் பேசுவதையும் பழகுவதையும் தவிர்த்தேன்.
பிறகு, பெண்களைப் போன்று முடி வளர்த்து, சிகை அலங்காரம் செய்து, அவர்கள் அணியும் ஆடைகளை உடுத்திக்கொள்ள விரும்பினேன். எனது விருப்பத்தை வீட்டில் கூறியபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன் என்னை அடித்து உதைத்தார்கள். எந்த நேரத்திலும் என் உயிருக்கு ஆபத்து வரலாம் என்ற நிலையில் பயந்து பயந்துதான் அப்போது இருந்தேன். பின்னர், என் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் உரிமை எனக்கு இருக்கிறது என்று வீட்டில் கூறிவிட்டு வீட்டைவிட்டு வெளியேறிவிட்டேன்.
கடலூரில் இருந்த மது என்ற திருநங்கை அம்மா என்னைத் தத்தெடுத்து பார்த்துக்கொண்டார். பின்னர் அப்பா, அம்மா வந்து என்னை வீட்டுக்கு வரச் சொல்லி அழுதார்கள். அதனால் மீண்டும் வீட்டுக்கு வந்தேன். எனக்கு வேண்டியதைச் செய்து கொடுத்து, என் விருப்பப்படி இருக்க அனுமதித்தனர். பெண்ணாகப் பாலின அறுவைசிகிச்சை செய்துகொள்ள வேண்டும் என்ற என் விருப்பத்தை அம்மாவிடம் கூறினேன். ஆனால், அப்போது பணமில்லாத காரணத்தால், இரண்டு மாதங்கள் போகட்டும் என்றார் அம்மா.
அதனால் மீண்டும் வீட்டிலிருந்து வெளியேறி கடலூரில் மது அம்மா வீட்டுக்கு வந்துவிட்டேன். அவர்தான் எனக்கு பாலின மாற்று அறுவைசிகிச்சைக்கு உதவினார். சிகிச்சைக்குப் பிறகு வீட்டுக்கு வந்தேன். அப்போது அப்பாவும் அம்மாவும் என்னை மகளாக வரவேற்று எனக்கு வேண்டியதைச் செய்தார்கள், ரொம்ப அன்பாகப் பார்த்துக்கொள்கிறார்கள்” என்கிறார் மகிழ்ச்சியுடன்.
நம்மிடம் பேசிய நிஷாவின் தாய் அமுதா, “17 வயது வரை ஆணாக இருந்த என் மகன் பெண்களைப் போன்று நடந்து கொண்டது எனக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஆனால், அவள் திருநங்கையாக மாறி என்னை விட்டுப் பிரிந்து சென்ற பிறகு, அவளைப் புரிந்துகொண்டோம். உடலில் இயற்கையாக நடைபெறும் பாலியல் மாற்றத்துக்கு அவளை குறை கூறுவது தவறானது. அதை உணர்ந்துதான், `நீ எப்படி இருந்தாலும் பரவாயில்லை, நீதான் எங்களுக்கு முக்கியம்’ என்று கூறி வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டேன். பாலியல் அறுவைசிகிச்சை செய்த பின்னர், திருநங்கைகளுக்கு செய்யப்படும் வருட பூஜையை என் மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழாவாக நடத்தினேன்.
பெண் பிள்ளைக்கு தாய் செய்ய வேண்டிய கடமையைச் செய்தேன். அவளுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்தியபோது என் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் வந்து வாழ்த்தியபோது அவள் பிறக்கும்போது இருந்த மகிழ்ச்சியைவிட அதிக மகிழ்ச்சியாக இருந்தேன்.
பெரும்பாலான பெற்றோர் தங்கள் பிள்ளைகள் திருநங்கை/திருநம்பியாக மாறினால் அவர்களை வெறுத்து ஒதுக்குகின்றனர். ஆனால், அப்படி வெறுத்து ஒதுக்கப்படும் அந்தப் பிள்ளைகள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை என் மகள் மூலமாகப் பார்த்திருக்கிறேன். அந்த நிலையை அவர்களுக்குக் கொடுத்தது இறைவன். அதனால் அவர்களை வெறுப்பது நியாயமில்லை. அதைப் புரிந்துகொண்டு நம் பிள்ளைகளை ஏற்றுக்கொள்வது நமது கடமை. திருநங்கையின் அம்மா என்பதில் எனக்குப் பெருமை இப்போது” என்றார்.
மாற்றங்கள் மலரட்டும்!