தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்) திட்டத்துக்கான வட்டி விகிதம் 8.1 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது 2021-22-ம் நிதி ஆண்டுக்கானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அளிக்கப்பட்டு வந்த 8.5 சதவீதத்திலிருந்து தற்போது குறைக்கப்பட்டுள்ளது.
இது வரை பிஎஃப் நிதிக்கு அளித்து வந்த வட்டி விகிதத்தில் இது மிகக் குறைவான வட்டி விகிதமாகும். மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தலைமையில் சனிக்கிழமை குவஹாட்டியில் நடைபெற்ற கூட்டத்தில் 8.1 சதவீத வட்டி அளிப்பது என முடிவு செய்து அதை பரிந்துரைத்துள்ளது. நாட்டின் வங்கியல்லாத மிகப் பெரிய நிதி நிர்வகிக்கும் அமைப்பாக பிஎஃப் அறக்கட்டளை திகழ்கிறது. இந்த அமைப்பு ரூ. 16 லட் சம் கோடியை நிர்வகிக்கிறது.
இந்த பரிந்துரையை நிதி அமைச்சகம் பரிசீலித்து ஒப்புதல் வழங்கும். இதற்கு முன்பு 2018-19-ம் நிதி ஆண்டில் 8.65 சதவீத வட்டியும், 2019-20-ம் நிதி ஆண்டில் 8.5 சதவீத வட்டியும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பிஎஃப் நிதித் திட்டத்தில் மொத்தம் 24.77 கோடி தொழிலாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் 14.36 கோடி பணியாளர்களுக்கு தனித்துவமான அடையாள எண் (யுஏஎன்) வழங்கப்பட்டுள்ளது. 2019-20-ம் நிதி ஆண்டில் 5 கோடி தொழிலாளர்கள் தங்களது பிஎப் நிதியில் கூடுதல் நிதியை செலுத்தியுள்ளனர்.
மாத சம்பளம் ரூ. 15 ஆயிரத்துக்கு மேல் பெறும் பணியாளர்கள் அனைவரும் பிஎஃப் நிதியில் இணைக்கப்பட வேண்டியது கட்டாயமாகும். 20 பேருக்கு மேல் ஊழியர்கள் உள்ள நிறுவனங்கள் ஊழியர்களின் பங்களிப்பாக அவர்களது அடிப்படை சம்பளத்தில் 12 சதவீதமும், நிறுவனங்களின் பங்களிப்பாக 12 சதவீதமும் செலுத்த வேண்டியது கட்டாயமாகும். தொழிலாளர் ஓய்வூதிய சட்டம் 1995-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது.
2015-16-ம் நிதி ஆண்டு முதல் பங்குச் சந்தையில் பகுதி அளவில் பிஎஃப் நிதி முதலீடு செய்யப்படுகிறது. அதிக சந்தை பாதிப்புக்குள்ளாகாத பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீடு செய்யப்படுகிறது. இதற்கான அதிகபட்ச வரம்பு 15 சதவீதமாக நிர்ணயிக்கப்படுகிறது. அதிகபட்சம் 65 சதவீத தொகை அரசு கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படுகிறது.