மகாத்மா காந்தியின் கொள்கைகளை புதிய தேசிய கல்விக் கொள்கையில் பிரதமர் நரேந்திர மோடி இணைத்துள்ளார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
மகாத்மா காந்தியடிகள் மேற்கொண்ட உப்பு சத்தியாகிரகத்தின் 92-வது நினைவு தினத்தை முன்னிட்டு தெற்கு குஜராத்தின் தண்டி வரையிலான சைக்கிள் பேரணியை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று அகமதாபாத்தில் தொடங்கி வைத்தார். தண்டி யாத்திரை நடைபெற்ற அதே பாதையில் சைக்கிள் மூலம் பயணிக்கவுள்ள 12 பேர், காந்தியடிகளின் போதனைகளை பரப்பவுள்ளனர்.
இதைத் தொடர்ந்து அகமதாபாத்தில் உள்ள கோச்ராப் ஆசிரமத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:
புதிய கல்விக் கொள்கை உட்படஅரசின் பல்வேறு நலத் திட்டங்களில் மகாத்மா காந்தியடிகளின் கொள்கைகள் மற்றும் போதனைகளை பிரதமர் நரேந்திர மோடி சேர்த்துள்ளார்.
காந்தியடிகள் காட்டிய பாதையில் இருந்து நாம் (இந்தியா) திசைமாறிப் போனதுதான் பிரச்சினை. பிரதமர் நரேந்திர மோடி, புதிய கல்விக் கொள்கையில், தாய்மொழி மற்றும் தேசிய மொழிகளின் முக்கியத்துவம் மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த கல்வி போன்ற காந்தியடிகளின் லட்சியங்களை இணைத்துள்ளார்.
இந்த காந்தியக் கொள்கைகள் அனைத்தும் பிரதமரால் கொள்கையில் பின்னப்பட்டவை. உப்பு சத்தியாகிரக போராட்டத்தில், இரவு நேரங்களில் கிராமங்களில் தங்கியிருந்தபோது சாதாரண மக்களின் பிரச்சினைகளை மகாத்மா காந்திபுரிந்துகொண்டார். பிரச்சினைகளை புரிந்து கொண்டு தீர்வுகளை தனது உரைகள் மூலம் மக்களுக்கு எடுத்துரைத்தார். மோடி பிரதமரான பிறகு இதைத்தான் பேசினார்.
தூய்மை இந்தியா திட்டம், ஒவ்வொரு வீட்டிலும் கழிவறை, குடிநீர், மின்சார இணைப்பு, கிராமப்புற மேம்பாட்டுக்கான திட்டங்கள், தன்னம்பிக்கை கிராமங்களை உருவாக்கும் திட்டங்கள் போன்றவற்றை ஆய்வு செய்தால், காந்திய சிந்தனைகளின் பிரதிபலிப்பை நாம் காண முடியும். அவற்றில் உள்ள கொள்கைகளை புரிந்து கொள்ளலாம். நான் 10 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆசிரமத்துக்கு வருகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
மகாத்மா காந்தியால் நிறுவப்பட்ட இந்தியாவின் முதல் ஆசிரமம் கோச்ராப் ஆசிரமம் ஆகும். இது சுதந்திர இயக்கத்தின் ஒருபகுதியாக 1915-ல் அமைக்கப்பட்டது. பின்னர், சபர்மதி ஆசிரமத்துக்கு மகாத்மா காந்தி மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
1930-ம் ஆண்டு மார்ச் 12-ம்தேதி 80 பேர் கொண்ட குழுவுடன் மகாத்மா காந்தி தண்டி யாத்திரையைத் தொடங்கினார். 24நாட்கள் நடந்த இந்தப் போராட்டத்தில் பிரிட்டிஷாரின் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து குரல் எழுப்பி மக்களுக்கு சுதந்திரப் போராட்ட உணர்வை எழுப்பினார் காந்தி என்பது குறிப்பிடத்தக்கது. – பிடிஐ