புளியங்குடியில் கல்லூரி மாணவி தற்கொலை- 2 பேராசிரியர்கள் மீது வழக்கு

புளியங்குடி:

தென்காசி மாவட்டம் புளியங்குடி சிந்தாமணி மேலரதவீதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி மாடத்தி. இவர்களது மகள் இந்து பிரியா (வயது18).

இவர் புளியங்குடியில் மனோ கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வந்தார். கணேசன் இறந்து விட்டதால் மாடத்தி பீடி சுற்றி மகளை வளர்த்து வந்தாள்.

இந்நிலையில் நேற்று இந்து பிரியா தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்து பிரியா தூக்குபோட்டு கொண்ட அறையில் கடிதம் ஒன்று சிக்கியது. அதில் தனது தற்கொலைக்கு காரணம் கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர் மற்றும் ஒரு பேராசிரியை என்று எழுதி இருந்தார்.

மேலும் தான் செய்யாத தவறுக்கு தன்னை மன்னிப்பு கடிதம் எழுதி கொடுக்குமாறு நிர்பந்தப்படுத்தியதாகவும், அதன் காரணமாக மனமுடைந்து தற்கொலை செய்து கொள்வதாகவும் எழுதி இருந்தார்.

அதனை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது மாணவியின் உறவினர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மேலும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் கூறி போராட்டம் நடத்தினர்.

போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டதால் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதற்கிடையே மனோ கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் முத்துமணி மற்றும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த பேராசிரியை வளர்மதி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 306 (தற்கொலைக்கு தூண்டுதல்) -ன் கீழ் வழக்குப்பதிவு செய்து 2 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.