திருவண்ணாமலை: ஆரணி அடுத்த ஆவணியாபுரத்தில் பெற்றோரை இழந்து தங்கை மற்றும் தம்பியுடன் ஒரு வேளை உணவுக்கு கூட வழியின்றி தவிக்கும் தங்களை பாதுகாத்து அரவணைக்க வேண்டும் என முதல்வர் மற்றும் ஆட்சியர் உதவிட வேண்டும் என பத்தாம் வகுப்பு மாணவி கோரிக்கை விடுத்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த ஆவணியாபுரம் கிராமத்தில் வசித்தவர் தையல் தொழிலாளி லோகநாதன். இவரது மனைவி வேண்டா. இவர்களுக்கு கார்த்திகா(15), சிரஞ்சீவி(14), நிறைமதி(10) ஆகிய 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் உடல்நலக் குறைவால் லோகநாதன், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார்.
இதையடுத்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்ட பணிக்கு சென்று பிள்ளைகளுடன் வேண்டா வாழ்ந்து வந்தார். அதே கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பில் கார்த்திகாவும், 9-ம் வகுப்பில் சிரஞ்சீவியும், 6-ம் வகுப்பில் நிறைமதியும் படித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட வேண்டாவின் உடல்நிலை மோசமடைந்தது. மருத்துமவனையில் சிகிச்சை பெற்று வந்த போதும், சிகிச்சை பலனின்றி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அவரும் உயிரிழந்துள்ளார். இதனால் தாய், தந்தையை இழந்த 3 பிள்ளைகளும், அடுத்த வேளை உணவுக்கு, கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் அவர்களது கல்வியும் கேள்வி குறியானது.
இது குறித்து கார்த்திகா கூறும்போது, ”எங்களது தாய் மற்றும் தந்தை ஆகியோர் உடல் நலக்குறைவால் உயிரிழந்துவிட்டனர். இப்போது நாங்கள் மூவரும் ஆதரவற்று உள்ளோம். எங்களை அரவணைக்க யாரும் இல்லை. பள்ளியில் வழங்கும் மதிய உணவை உட்கொள்கிறோம். மேலும் எங்கள் பகுதியில் வசிக்கும் மக்கள் செய்து வரும் உதவியால், மேலும் ஒரு வேளை உணவு கிடைக்கிறது. அவர்களிடம், தொடர்ந்து உதவியை கேட்கவும் தயக்கமாக உள்ளது. பள்ளி இல்லாத நாட்களில் உணவுக்காக காத்திருப்போம். பசியின் வலியை அனுபவித்து வருகிறோம். இதேபோன்று எங்களால் தொடர்ந்து வாழ முடியுமா என்ற கேள்வி எழுகிறது.
எங்களது ஓட்டு வீடும் பழுதடைந்து கிடக்கிறது. மழைக் காலத்தில் ஒழுகும். வீட்டில் உள்ளே இருக்க முடியாது. எந்த நேரத்தில் இடிந்து விழும் என தெரியவில்லை. நாங்கள் மூவரும் தனியாக வசிப்பதால் அச்சமாக இருக்கிறது. நாங்கள் மூவரும் படிக்க வேண்டும் என ஆசைப்படுகிறோம். எங்களது படிப்பு தடையில்லாமல் இருக்க முதல்வர் மற்றும் ஆட்சியர் ஆகியோர் உதவிட வேண்டும். உயர் கல்வி வரை படிப்பதற்கு உதவி செய்ய வேண்டும். மேலும் அரசு திட்டத்தின் மூலம், எங்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க வேண்டும்” என்றார்.
இது குறித்து கிராம மக்கள் கூறும்போது, ”எங்களால் முடிந்தளவு 3 பிள்ளைகளுக்கும் உதவி வருகிறோம். ஆனாலும், அவர்களது எதிர்காலம் முழுவதும் உதவிட முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது. 3 பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆட்சியர் பா.முருகேஷ் ஆகியோர் கல்வி மற்றும் இருப்பிடத்துக்கு உதவிட வேண்டும்” என்றனர்.