புதுடெல்லி: துணை ஆணையர் கார் மீது தனது சொகுசு காரை மோதிவிட்டு நிற்காமல் சென்ற பேடிஎம் நிறுவனர் கைது செய்யப்பட்டார். டெல்லி மாளவியா நகரில் உள்ள பெட்ரோல் பங்குக்கு கடந்த மாதம் 22ம் தேதி டெல்லி தெற்கு போலீஸ் துணை ஆணையர் காரை கான்ஸ்டபிள் தீபக் குமார் ஓட்டிச் சென்றுள்ளார். அரவிந்தோ சாலையில் உள்ள மதர் இன்டர்நேஷனல் பள்ளியின் கேட் எண் 3 அருகே மெதுவாக சென்று கொண்டிருந்தபோது, ஒரு நீல நிற சொகுசு கார் வேகமாக வந்து துணை ஆணையர் கார் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், காரை ஓட்டி வந்தது பேடிஎம் நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான விஜய் சேகர் ஷர்மா என்பது தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் சர்மாவை கைது செய்து, ஜாமீனில் விடுவித்தனர். இது தொடர்பாக ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், பேடிஎம் செய்தி தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், ‘ஷர்மா கைது செய்யப்பட்டு, விசாரணை அதிகாரியால் அதே நாளில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் எந்தவொரு நபருக்கும் அல்லது வாகனத்திற்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. கைது செய்யப்பட்டதன் தன்மையைக் கூறும் ஊடக அறிக்கைகள் மிகைப்படுத்தப்பட்டவை’ என்றார்.