போபால்: மத்திய பிரதேசத்தில் மதுபான கடை மீது இம்மாநில முன்னாள் முதல்வர் உமாபாரதி கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் தலைமையில் பாஜ ஆட்சி நடைபெற்று வருகிறது. ‘இந்த மாநிலத்தில் ஜனவரி 15ம் தேதிக்குள் மதுவை தடை செய்ய வேண்டும். இல்லையென்றால், தடியால் அடிப்பேன்,’ என்று முன்னாள் முதல்வரும், பாஜ மூத்த தலைவருமான உமாபாரதி கடந்தாண்டு எச்சரித்தார். ஆனால், ஜனவரி 15ம் தேதிக்குள் மதுவுக்கு தடை விதிக்கப்படவில்லை. அதற்கு மாறாக, மத்திய பிரதேச அரசு புதிய கலால் கொள்கையை அறிவித்தது. அதன்படி, அரசு வெளிநாட்டு மதுபானங்கள் மீதான கலால் வரியை 10-13 சதவீதம் குறைத்தது. வெளிநாட்டு, உள்நாட்டு மதுபானங்களை ஒன்றாக விற்பனை செய்யவும் கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டன. திராட்சை தவிர கருப்பு பிளம்சில் இருந்து ஒயின் தயாரிக்கவும் மது உற்பத்தியாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதற்கு உமாபாரதி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மதுகடைகளின் முன்பாக மக்களை திரட்டி போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தார். இந்நிலையில், போபாலில் தனது ஆதரவாளர்களுடன் கூடிய உமாபாரதி, அங்குள்ள மதுபான கடைக்குள் நுழைந்து பெரிய கல்லை வீசி தாக்குதல் நடத்தினார். இதில், மதுபாட்டில்கள் உடைந்தன. அவருடைய இந்த செயல், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.