மத்திய பிரதேசத்தில் மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்ட ஒருவரை போலீஸார் சரமாரியாக தாக்கினர். இதன் காரணமாக அந்த போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் நகரில் நேற்று இரவு 3 போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மது அருந்தியிருந்த இரண்டு பேர், அங்கு வருவோர், போவோரிடம் தகராறு செய்து கொண்டிருந்தனர். இதனைக் கண்ட போலீஸார், அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது அவர்களில் ஒருவர், போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் ஒரு காவலரின் கையில் இருந்த லத்தியையும் பிடுங்க முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த காவலர், அந்த இளைஞரை கடுமையாக தாக்கினார். இதில் அவரது ஆடை அவிழ்ந்தது. இருந்தபோதிலும், சாலையில் அவரை இழுத்துச் சென்று காலால் போலீஸ்காரர் எட்டி உதைத்தார்.
இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இந்த வீடியோ வைரலாக பரவியது. மது அருந்தியவர் தகராறு செய்திருந்தாலும், அவரை எச்சரித்து அனுப்பியிருக்கலாம். இல்லையெனில், அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றிருக்கலாம். அதை விட்டுவிட்டு, நடுரோட்டில் ஆடை இல்லாமல் அவரை மிருகத்தனமாக தாக்கியதை ஏற்றுக்கொள்ள முடியாது என பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்தனர். பொதுமக்களிடம் இருந்து எதிர்ப்பு அதிகரித்ததை அடுத்து, சம்பந்தப்பட் 3 போலீஸாரை மாவட்ட எஸ்.பி. சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM