மகாராஷ்டிர மாநிலம் வாஷிம் மாவட்டத்தில் மனைவியுடன் சண்டையிட்டு, அவரை பழிவாங்க தனது ஒரு வயது மகளை வயலில் உயிருடன் புதைத்து தந்தையே கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் வாஷிம் மாவட்டம் வாடி வால்க் என்ற கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் ஹூக்ஹி (வயது 27). இவருக்கு காவேரி என்ற மனைவியும் 3 மகள்களும் உள்ளனர். இதற்கிடையில், 3-ம் குழந்தையும் பெண் குழந்தை என்பதால் சுரேஷ் தனது மனைவியை தொடர்ந்து தாக்கி வந்துள்ளார். மேலும், காவேரி நடத்தை மீது சுரேஷுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில், மனைவிக்கும் சுரேஷுக்கும் இடையே நேற்று மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது மனைவியை பெல்டால் தாக்கி கழுத்தை நெரிக்க முயன்றுள்ளார். ஆனால் சுரேஷிடம் இருந்து தப்பித்து வீட்டை விட்டு வெளியேறி தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால், ஆத்திரமடைந்த கணவன் சுரேஷ் வீட்டில் இருந்த தனது ஒரு வயது பெண் குழந்தையை அருகில் உள்ள வயல்வெளியில் உயிரோடு குழி தோண்டி புதைத்துள்ளார்.
உறவினர் வீட்டிற்கு சென்ற காவேரி மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது தனது மகள்களில் ஒருவரை காணவில்லை என்பதை கண்டுபிடித்தார். பின்னர் இது குறித்து போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் சுரேஷ் தனது குழந்தையை வயல்வெளியில் புதைத்த கொடூர சம்பவம் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து சுரேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM