முன்னோக்கிய பொருளாதாரப் பாதைக்கான அமைச்சரவை உபகுழுக்களின் கலந்துரையாடல்கள் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் தலைமையில் ஆரம்பம்

சீனா, ஜப்பான் மற்றும் மத்திய கிழக்குப் பிராந்தியத்துடன் பொருளாதார விவகாரங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்துவதற்காக கடந்த மாதம் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட மூன்று அமைச்சரவை உபகுழுக்கள் 2022 மார்ச் 9 மற்றும் 10ஆந் திகதிகளில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் பாராளுமன்றத்தில் முதன்முறையாகக் கூடின.

பணிகளை ஆரம்பிக்கும் முகமாக, உபகுழுக்களின் உறுப்பினர்களாக செயற்படும் அமைச்சர்களான பந்துல குணவர்தன, நாமல் ராஜபக்ஷ, அலி சப்ரி, ரமேஷ் பத்திரன மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோரின் பங்கேற்புடன் அமைச்சரவை உபகுழுக்களின் ஆரம்பக் கூட்டங்கள் கூட்டப்பட்டன.

ஏற்றுமதி சார்ந்த தொழில்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மூலப்பொருட்கள் மற்றும் தொழில்துறைப் பொருட்களை இறக்குமதி செய்யும் நாடுகளுடன், அவற்றை இறக்குமதி செய்வதற்கான மாற்று வழிகளை அடையாளம் காணும் நோக்கில் பேச்சுவார்த்தை நடாத்துவதற்காக, ‘பொருளாதாரம் 2022 மற்றும் முன்னோக்கிச் செல்லும் பாதை’ என்ற தொனிப்பொருளின் கீழ் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தின் அடிப்படையில் இந்த அமைச்சரவை உபகுழுக்கள் நியமிக்கப்பட்டன. வர்த்தகத்தை ஆதரிக்கும் வசதியை உருவாக்குவதற்காக எமது நம்பகமான வர்த்தகப் பங்காளிகளுடன் இணைந்து முன்னோக்கிச் செல்லும் பொருளாதாரப் பாதையை ஆராய்வதற்காக அமைச்சரவை உபகுழுக்களை ஜனாதிபதி நியமித்துள்ளதாக இதன் தலைவரான வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீரிஸ் குறிப்பிட்டார்.

வர்த்தகம், வேலைவாய்ப்பு மற்றும் வெளிநாடுகளிலிருந்து பணம் அனுப்புதல் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் விளக்கமளித்தனர். முன்மொழியப்பட்ட சீனா – இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பாக நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் தொடர்பான தற்போதைய முன்னேற்றம் குறித்து சீனா தொடர்பான அமைச்சரவை உபகுழுவிற்கு விளக்கமளிக்கப்பட்ட அதேவேளையில், சம்பந்தப்பட்ட பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்வதற்கு உபகுழு ஒப்புக்கொண்டது.

பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் விரைவான முன்னேற்றத்தை அடைந்து கொள்வதற்காக பங்குதாரர் நாடுகளிடமிருந்து இலங்கை கோரக்கூடிய அவசரத் தேவைகளின் பட்டியலை அனைத்து அமைச்சுக்கள் மற்றும் முகவர் நிலையங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளுமாறு உபகுழுக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளன.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு

2022 மார்ச் 13

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.