பெங்களூரு : சர்வோதயா கல்வி நிறுவனம் தொடர்பாக, கர்நாடக சட்டமேலவை தலைவர் பசவராஜ் ஹொரட்டி மீது வழக்கு பதிவு செய்த தார்வாட் ஊரக போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் சுதாவேவை, பணியிடை நீக்கம் செய்து, மாநில போலீஸ் டி.ஜி.பி., பிரவீன் சூட் உத்தரவிட்டுஉள்ளார்.தார்வாடின் முகதா கிராமத்தில் உள்ள, சர்வோதயா கல்வி அறக்கட்டளை விஷயமாக, பள்ளி ஊழியர்கள், வால்மீகி சமுதாய தலைவர்களுக்கிடையே, ஜனவரி 25ல் தகராறு நடந்தது. இது தொடர்பாக, வால்மீகி தலைவர் மோகன் குடசலமனி என்பவர், ஊரக போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இதன்படி போலீசார், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். இதில் சட்டமேலவை தலைவர் பசவராஜ் ஹொரட்டி, ஐந்தாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். சம்பவ நாளன்று ஹொரட்டி, பெங்களூரில் இருந்தார். இவரது பெயர் வழக்கில் சேர்க்கப்பட்டது, சர்ச்சைக்கு காரணமானது.சில நாட்களுக்கு முன், மேலவை கூட்டத்திலும் கூட, ‘மேலவை தலைவர் மீதே, வழக்கு பதிவு செய்து அவரது பதவியை அவமதித்துள்ளனர். சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்’ என, ம.ஜ.த., உறுப்பினர்கள் பிடிவாதம் பிடித்தனர்.சபையில் இருந்த உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திராவும், நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருந்தார். இதுபற்றி மாநில போலீஸ் டி.ஜி.பி., பிரவீன் சூட்டுக்கும் உத்தரவிட்டிருந்தார். இதன்படி இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் சுதாரேவை, பணியிடை நீக்கம் செய்து டி.ஜி.பி., உத்தரவு பிறப்பித்துள்ளார்.டி.ஜி.பி., பிரவீன் சூட் கூறுகையில், ”புகாரில் ஹொரட்டி பெயர் இல்லையென்றாலும், அவரது பெயரை முதல் தகவல் அறிக்கையில், பதிவு செய்திருப்பது, பணியில் அலட்சியம், பொறுப்பற்ற தன்மையாகும். ”இது குறித்து துறை ரீதியிலும் விசாரணை நடக்கும். இன்ஸ்பெக்டர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்,” என்றார்.
Advertisement