இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது.
இந்திய அணி இரண்டாம் இன்னிங்சில் 9 விக்கெட்டுகளை இழந்து 303 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. அதன்படி இந்திய அணி இலங்கை அணிக்கு 447 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது. இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 28 ரன்கள் எடுத்துள்ளது.
இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் அதிரடியாக ஆடிய இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், 28 பந்துகளில் 7 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் அரை சதம் அடித்து சாதனை படைத்தார். இதன்மூலம் கபில் தேவின் 40 ஆண்டு கால சாதனையை முறியடித்தார்.
இது குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் இந்திய அணியின் துணை கேப்டனும், வேக பந்து வீச்சாளருமான ஜஸ்பிரித் பும்ரா,
பேசியதாவது:
ரிஷப்பண்ட் தனது வழக்கமான பாணிக்கு திரும்பியுள்ளார். இயற்கையாகவே அவர் ஆக்ரோஷமாக பேட்டிங் செய்யக் கூடியவர். அணியில் உள்ள ஒவ்வொரு வீரரும் ஒரே மாதிரியான டெம்போவுடன் விளையாட மாட்டார்கள், அதை நாங்கள் புரிந்து கொள்கிறோம்.
அவர் (ரிஷப்) இன்னும் இந்த விளையாட்டைப் பற்றி மேலும் மேலும் அனுபவத்தையும் கற்றுக்கொள்கிறார். அவரது திட்டம் (தாக்குதல்) முன்னோக்கி செல்வது, அது எங்களுக்கு சாதகமான அறிகுறியாகும். இவ்வாறு பும்ரா தெரிவித்துள்ளார்.
மேலும் தனது சொந்த மண்ணில் முதல் முறையாக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியது குறித்து பேசிய பும்ரா, அது நன்றாக இருந்தது என்றும், சில சமயங்களில் நீங்கள் சொந்த மண்ணில் விளையாடுவதைத் தவற விடுவீர்கள் எனவும் தெரிவித்தார்.
இந்த நேரத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது, அணியின் வெற்றிக்கு எனது பங்களிப்பு மகிழ்ச்சியளிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.