ரோஹிங்கியா அகதிகளை சட்டவிரோதமாக கடத்தி வந்து, போலி ஆவணங்கள் மூலம் இந்தியாவுக்குள் குடியேற உதவியாக, அசாமைச் சேர்ந்த நபர் உட்பட 6 பேரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது.
பௌத்தர்களுக்கும் – இஸ்லாமிய ரோஹிங்கியாக்களுக்கும் இடையிலான இன மோதல்களை தொடர்ந்து, ராணுவ நடவடிக்கைக்கு அஞ்சியும், ஆங் சாங் சூகி தலைமையிலான அரசின் அடக்கு முறைக்கும் பயந்தும் லட்சக்கணக்கான ரோஹிங்கியா இன மக்கள் அகதிகளாக மியான்மரில் வெளியேறி வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளில் தஞ்சமடைந்தனர்.
இந்த நிலையில், அசாம், மேற்கு வங்கம், மேகாலயா மாநிலங்கள் வழியாக ரோஹிங்கியா அகதிகள் சட்டவிரோதமாக இந்திய பகுதிக்குள் கடத்திவரப்பட்டு, பான் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட போலி ஆவணங்கள் தயாரித்து தங்க வைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்ட அசாமைச் சேர்ந்த கும்கும் அகமது சவுத்ரி என்பவனை பெங்களூருவில் வைத்து என்.ஐ.ஏ. கைது செய்தது. வழக்கு தொடர்பாக அசாம், மேகாலயா, பெங்களூருவில் சோதனை நடத்திய என்.ஐ.ஏ. அதிகாரிகள், பல்வேறு ஆவணங்களையும், மின்னணு சாதனங்களையும் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளது.